சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து வந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்பட 66 எம் எல் ஏ.க்களும் யார் அந்த சார்? என்ற பேட்ஜ் பொருந்திய சட்டையை அணிந்து வந்துள்ளனர். பேரவைக்குள் சென்றதும் அவர்கள் அந்த பேட்ஜை அணிந்து கொண்டனர். மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
முன்னதாக இன்று (திங்கள்கிழமை) சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் பல்கலை., வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால் போலீஸார் அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் கைது செய்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கவுள்ள நிலையில் அதிமுக எம் எல் ஏ.,க்கள் தங்களது சட்டைகளில் யார் அந்த சார்? என்ற பேட்ஜை அணிந்து வந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்றுகாலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். முன்னதாக ராஜ்பவனுக்கு, பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் பேரவை செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் சென்று ஆளுநர் ரவியை சந்தித்து உரையாற்ற வரும்படி முறைப்படி அழைப்பு விடுத்தனர். இந்தச் சூழலில் அதிமுக எம் எல் ஏ.,க்கள் தங்களது சட்டைகளில் யார் அந்த சார்? என்ற பேட்ஜை அணிந்து வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தில். இன்னொரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த சார் யார்? என்பதை ஏன் திமுக மூடி மறைக்கிறது என்று கூறி அதிமுக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் நீட்சியாகவே இன்று அதிமுக எம்எல்ஏ.,க்கள் தங்களது சட்டைகளில் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.