திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் அருகே, நான்குவழிச் சாலை அமைத்துக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், சென்னை செல்ல வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் நிலையில், விபத்துகள் தொடர்ந்து நேர்ந்து வருகிறது. முக்கியமாக வாகனங்கள் செல்லும் இடத்தில் இரண்டு பக்கமும் ரெட்டியூர், சின்னகம்மியம்பட்டு, குன்டிமாரியம்மன் வட்டம், காந்தி நகர் போன்ற வெவ்வேறு ஊர்கள் அமைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகளைத் தாண்டி பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் காணப்படும். காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள், வெளியூருக்கு வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் இங்கு நின்றுதான் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது பற்றி அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்தபோது, `நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் மிகவும் வேகமாக வருகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடக்காமல் பல முறை திக்குமுக்காடுகின்றோம்.
இதனால் பல முறை விபத்துகள் நேர்ந்து வருகிறது. அண்மையில் கூட ஸ்கூட்டியில் பெண் ஒருவர் சாலையைக் கடக்கும்போது நான்கு சக்கர வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இது போன்று இங்கு இரண்டு வருடங்களில் பல அசம்பாவிதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்விடத்தில் ஒரு பேரிகார்டு இருந்திருந்தால் இது போன்று நடந்திருக்காது’ என்று வேதனையுடன் கூறினர்.
இந்த விவகாரம் தொடர்பாக விகடன் “தளத்தில் திருப்பத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள் – நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?” என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை ஜனவரி 2-ம் தேதி வெளியிட்டிருந்தோம்.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, விகடனில் செய்தி வெளிவந்த மூன்று நாள்களில் (05/01/2025) அன்று அதிகாரிகள் விபத்து சூழலை கருத்தில் கொண்டு விரைந்து பேரிகார்டுகள் அமைத்துள்ளார்கள். இனிமேல் எந்த அசம்பாவிதமும் நடக்க வாய்ப்பில்லை என்று அப்பகுதி மக்கள் இன்முகத்துடன் கூறினார்கள்.