பிபிஎஸ்சி தேர்வு விவகாரத்தில் போராட்டம்: பிரசாந்த் கிஷோர் கைது

பாட்னா: பிஹாரில் நடைபெற்ற 70வது பிபிஎஸ்சி (Bihar Public Service Commission) ஒருங்கிணைந்த முதன்மை போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன சூராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் போலீஸாரால் இன்று (ஜன. 6) கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையின்போது மாணவர்கள் சூழ்ந்து கொண்டு பிரசாந்த் கிஷோரை கைது செய்ய விடாமல் தடுத்தனர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, பிரசாந்த் கிஷோரை காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.

பிபிஎஸ்சி ஒருங்கிணைந்த முதன்மை போட்டித் தேர்வு கடந்த டிசம்பர் 13ம் தேதி மாநிலம் முழுவதும் 912 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அந்த தேர்வை ரத்து செய்யக் கோரி பாட்னாவின் காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர் கடந்த 2ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தின்போது, 70வது பிபிஎஸ்சி தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும், 2015ல் உறுதியளித்தபடி 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த போட்டித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்தும், குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், டிசம்பர் 29 அன்று பாட்னாவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பிஹார் இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு அரசு வேலைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் குடியுரிமைக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதோடு, முதல்வர் நிதிஷ் குமார் மாணவர்களை நேரில் சந்தித்து, பிபிஎஸ்சி தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பான அவர்களின் கவலைகளை போக்கும் வரை, உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் உறுதிபட தெரிவித்திருந்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக் மத்தியில், முறைகேடு நடந்த 22 மையங்களில் கடந்த 4ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. 12,012 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 5,200 பேர் மட்டுமே தேர்வெழுதியதாக BPSC அறிவித்திருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.