சிட்னி,
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை இந்திய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அவர் ஒரு பந்தை வீசுவதற்கு சில அடி ஓடி வந்தபோது, பேட்ஸ்மேன் கவாஜா இன்னும் தயாராகவில்லை என நடுவர் சிக்னல் காட்டினார். இதனால் அதிருப்தியடைந்த பும்ரா என்னப்பா இது…. என்பது போல் இரு கைகளையும் விரித்தபடி கேட்க, எதிர்முனையில் நின்ற இளம் பேட்ஸ்மேன் கான்ஸ்டாஸ் அவரை ஏதோ சொல்லி சீண்டினார்.
இதனால் கோபமடைந்த பும்ரா பதிலுக்கு வார்த்தைகளை உதிர்த்தார். பிறகு நடுவர் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடைசி பந்தில் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் பும்ரா நேராக கான்ஸ்டாஸ் அருகே ஓடி வந்து ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் ஒட்டுமொத்த இந்திய அணியும் வெறித்தனமாக கொண்டாடினர்.
இதனால் இந்திய அணியினர் சாம் கான்ஸ்டாசை மிரட்டும் வகையில் கொண்டாடியதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு விமர்சித்தார். எனவே இந்திய அணியினருக்கு ஐ.சி.சி. தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் உஸ்மான் கவாஜா – பும்ரா பேச்சுவார்த்தை நடக்கும்போது இடையே வர கான்ஸ்டாசுக்கு உரிமை இல்லை என மெக்டொனால்டுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- “அது கடினமான ஆண்களால் விளையாடப்படும் கடினமான விளையாட்டு. அங்கே நீங்கள் மென்மையாகவும் எளிமையாகவும் இருக்க முடியாது. மற்றபடி அங்கு மிரட்டும் அளவுக்கு எதுவும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. உஸ்மான் கவாஜா நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது பும்ராவிடம் பேச கான்ஸ்டாசுக்கு எந்த உரிமையும் கிடையாது. பும்ராவிடம் தேவையின்றி பேச அவருக்கு எந்த வேலையும் கிடையாது. அது நடுவர் மற்றும் கவாஜா ஆகியோருடைய வேலை” என்று பதிலடி கொடுத்தார்.