புவனேஸ்வர்: ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் நேற்று மர்ம ட்ரோன் பறந்தது. இதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசாவின் புரி நகரில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் நேற்று அதிகாலை 4.10 மணிக்கு மர்ம ட்ரோன் பறந்தது. சுமார் 100 அடி உயரத்தில் அரை மணி நேரம் ட்ரோன் வட்டவடித்தது. இதனை பலர் வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
புரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி ட்ரோன் பறந்தது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒடிசா சட்ட அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்திரன் கூறும்போது, “தடையை மீறி புரி கோயில் வளாகத்தில் ட்ரோன் பறந்திருக்கிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மாவட்ட எஸ்பி பினக் மிஸ்ரா கூறும்போது, “கோயில் வளாகத்தில் ட்ரோன் பறந்தது தொடர்பாக விசாரிக்க 2 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்” என்று தெரிவித்தார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வரும் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வெளிநாடுவாழ் இந்தியர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உட்பட உலகம் முழுவதும் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் பங்கேற்க உள்ளனர். வரும் 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதையொட்டி தலைநகர் புவனேஸ்வர் மட்டுமன்றி புரி, கட்டாக் உள்ளிட்ட நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.