சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் உண்மையில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம்: சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை, திட்டங்களே இல்லாத, உண்மைகளை மறைக்கும் உரையாக அமைந்துள்ளது. ஒருவேளை, ஆளுநர் இந்த உரையை வாசித்து இருந்தால், அதில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்ததுபோல் ஆகியிருக்கும். தமிழகம் போதைப் பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்காத நிலையில் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் இந்த ஆளுநர் உரை, கொள்கையற்ற, புதிய திட்டங்கள் இல்லாத, வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை செய்யாத உரையாக விளங்குகிறது.
டிடிவி தினகரன்: ஆளுநரின் உரையில் நிர்வாக திறனற்ற திமுக அரசின் தற்பெருமைகளும், கற்பனைக்கு எட்டாத கட்டுக்கதைகளும் நிறைந்திருப்பது கண்டனத்துக்குரியது. ஆளுநர் உரை திமுக அரசின் குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு எந்த வகையிலும் பயன்தராத தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டிய உரை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.