பொக்ரான் அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்கு வகித்த ராஜகோபால சிதம்பரம் (88) மும்பை மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 1974 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. புகழ்பெற்ற விஞ்ஞானியான ராஜகோபால சிதம்பரம் இந்த அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்கு வகித்தார். அணுசக்தி துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்த சிதம்பரம், உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார்.
இதுகுறித்து அணுசக்தித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரும், சிறந்த இயற்பியலாளருமான டாக்டர் ராஜகோபால சிதம்பரம் சனிக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டின் அறிவியல் மற்றும் போர்த் திறன் மேம்பாட்டுக்கு டாக்டர் சிதம்பரம் வழங்கிய இணையற்ற பங்களிப்பு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவரது தொலைநோக்கு தலைமை ஆகியவை என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில், “ராஜகோபால சிதம்பரம் மறைவு செய்தியை அறிந்து மனவேதனை அடைந்தேன். இந்திய அணுசக்தி திட்டங்களின் முக்கிய சிற்பிகளில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அத்துடன் நாட்டின் அறிவியல் மற்றும் போர் திறன்களை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி உள்ளார். அவர் நாட்டு மக்களால் நன்றியுடன் நினைவுகூரப்படுவார். அவருடைய முயற்சிகள் வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்” என பதிவிட்டுள்ளார்.
இந்திய அணுசக்தி துறையின் செயலாளர் அஜித் குமார் மொகந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “சிதம்பரத்தின் மறைவு அறிவியல் சமூகத்துக்கும் இந்த நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவரை இழந்து இந்த நாடே துக்கம் அனுசரிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.
கடந்த 1936-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி சென்னையில் பிறந்த ராஜகோபால சிதம்பரம், சென்னை மாநிலக் கல்லூரி, பெங்களூரு ஐஐஎஸ்சி-யில் (பிஎச்டி) பயின்றார். அணுசக்தி துறை மற்றும் மத்திய அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
குறிப்பாக, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் (2001 – 2018), பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் (1990 – 1993), அணுசக்தி ஆணைய தலைவர் மற்றும் அணுசக்தி துறையின் அரசு செயலாளர் (1993 – 2000) ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இதுதவிர, சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) வாரிய தலைவராக 1994 முதல் 1995 வரை பதவி வகித்துள்ளார்.
நாட்டின் முதல் பொக்ரான் அணுகுண்டு சோதனையில் (1974) முக்கிய பங்கு வகித்த சிதம்பரம், 2-வது பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு தலைமை தாங்கினார்.
மத்திய அரசு ராஜகோபால சிதம்பரத்துக்கு 1975-ல் பத்மஸ்ரீ, 1999-ல் பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி கவுரவித்தது. இதுதவிர, பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி உள்ளன.