சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்திருக்கும் ‘மதகஜராஜா’ பொங்கல் ரேஸில் பங்கேற்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன் ரெடியான இப்படம், தயாரிப்பு நிறுவனத்தின் நிதி நெருக்கடியினால், ரிலீஸ் தாமதமாகி கொண்டே இருந்தது. இப்போது விடிவு காலம் பிறந்திருக்கிறது. திரையரங்க உரிமையாளரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் தான், இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்ற தகவல் பரவியது. இதற்காக ஒரு பெரும் தொகையை பலருக்கும் செட்டில் செய்து, படத்தை கொண்டு வருகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினால், சிரித்தபடியே உண்மையை போட்டுடைக்கிறார்.
” ‘மதகஜ ராஜா’வை நான் வாங்கவே இல்லை. அதான் உண்மை. கடந்த 2012ல் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரித்த படம் இது. அந்த வருஷம் சென்ஸாரும் ஆகிடுச்சு. அந்த சமயத்துல தயாரிப்பாளரோட சகோதரர் ஒருவர் காலமானர். இதனால் அவங்க நிதி நெருக்கடிக்கு உள்ளானார்கள். அதனால் அவங்க ‘மதகஜராஜா’வின் வெளியீட்டுக்கு முயற்சித்தும் எதுவும் நடக்க வில்லை. படத்தின் ஹீரோவான விஷாலும் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சி செய்தார். அந்த முயற்சியும் பலனிக்க வில்லை.
இப்போது தயாரிப்பு நிறுவனத்தின் குடும்பத்திலிருந்து இந்த படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சி எடுத்தனர். நான் உள்பட விநியோகஸ்தர்கள் பத்து பேருக்கு அவர்கள் பணம் தர வேண்டியிருக்கிறது. இதனால் அவங்க எங்களை கூப்பிட்டு, ‘நீங்க எல்லோரும் சேர்ந்து இந்த படத்தை ரிலீஸ் பண்ணுங்க. இதில் வரும் பணத்தை நீங்கள் சேர்ந்து பிரித்து கொள்ளுங்கள். பணம் குறைவானால், உடனடியாக மீதத்தை செட்டில் செய்து விடுகிறோம்’ என்றனர்.
இந்த சமயத்தில் தான் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டினார்கள். பத்து வருடத்திற்கு முன்னர் எடுத்த படம். இப்போது செட் ஆகுமா என்ற மனோபாவத்துடன் தான் படத்தை பார்த்தேன். ஆனால், படம் இப்பவும் கனெக்ட் ஆகக் கூடிய படமாக இருந்தது. படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி தவிர, தமன்னா ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். மனோபாலா காமெடி பிரமாதமாக வந்திருக்கிறது. ஆர்யா ஒரு கேமியோ ரோல் செய்திருக்கிறார். பாடல்களும் ஃப்ரெஷ்ஷா இருந்தது. படத்தை பார்த்து முடித்த கையோடு, சுந்தர்.சியை அழைத்து விஷயத்தை சொன்னேன்.
அவருக்கு சந்தோஷம். `படத்தை நானே கொண்டு வருகிறேன். ஒரு தொகையை கொடுத்துவிடுகிறேன். அந்த தொகையை நீங்கள் எல்லோரும் பிரித்துக் கொள்ளுங்கள்’ ரிலீஸ் ஆன பிறகு 0ver flow ஆனாலும் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். குறைவானாலும் திருப்பிக் கேட்க மாட்டேன்’ என்று சுந்தர்.சி சொன்னார். நானும் சரி என்று சொல்லி விட்டேன். சுந்தர்.சி கொடுக்கக் கூடிய பணத்தை எல்லோருக்கும் பிரித்து கொடுக்கப் போகிறேன். படத்தை ரெட் ஜெயண்ட் தான் ரிலீஸ் செய்கின்றனர். நாளை முதல் புக்கிங் திறக்கும்” என்கிறார்