பிப்ரவரியில் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை பிசிசிஐ இந்த வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்திய அணி மொத்தமாக 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. 50 ஓவர் வடிவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் அணியில் சில மாற்றங்களை பிசிசிஐ மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பேட்டிங்கில் இந்திய அணி வீரர்கள் யாரும் பார்மில் இல்லாததால் இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பதில் பிசிசிஐக்கு பெரிய சவாலாக அமைத்துள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. எனவே அந்த தொடரில் இடம் பெரும் வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடி இருந்தாலும், சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோஹித் சர்மா தான் அணியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் முடிந்த பின்பு மாற்றம் செய்து கொள்ளலாம் என பிசிசிஐ விரும்புகிறது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியாவின் டெஸ்ட் மற்றும் டி20 அணியில் விளையாடி வருகிறார். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவதால் சமீபத்திய டி20 போட்டியிலும் அவர் இடம் பெறவில்லை. இன்னும் ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் அறிமுகமாகவில்லை. சாம்பியன்ஸ் டிராபியிலும் ஜெய்ஷ்வால் இடம் பெற மாட்டார் என்று கூறப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் மற்றும் ஷுப்மான் கில் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் இடம் பெறலாம். ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா அணியில் இடம் பெற உள்ளனர்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி பேக்கப் வீரராக தேர்வு செய்யப்படலாம். குல்தீப் யாதவ் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவருடைய இடம் கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை குல்தீப் பிட் இல்லை என்றால் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்யலாம் என்று பிசிசிஐ திட்டம் வைத்துள்ளனர். சமீபத்திய டி20 போட்டிகளில் வருண் சிறப்பாக பந்துவீசி இருந்தார். அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் கூடுதல் வீரர்களாக தேர்வு செய்யப்படலாம். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் முதல் தேர்வாக இருக்கும்.
பும்ரா மற்றும் ஷமியின் காயத்தை கருத்தில் கொண்டு அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் ராணா தேர்வு இருக்கும். பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை ஜனவரி 12ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக பிப்ரவரி 20 ஆம் தேதி விளையாடுகிறது. அதன் பிறகு பிப்ரவரி 23 மற்றும் மார்ச் 2 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திற்கு எதிராக விளையாடுகிறது.