கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறார் எனத் தகவல் பரவிவருகிறது. இது குறித்து அவர் உறுதியான முடிவை எடுக்கவில்லை எனினும், ராஜினாமா செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக அவர் 9 ஆண்டுகள் வகித்துவரும் கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவார் என ஊடகங்கள் தெரிவித்தன.
வரும் புதன் அன்று நடைபெறவுள்ள லிபரல் கட்சியின் (Liberal Party of Canada) தேசிய தலைவர்கள் அவசர கூட்டத்துக்கு முன்பு ட்ரூடோ தனது முடிவை அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. எனினும் ஊடகங்களில் பரவும் தகவல் குறித்து கனட பிரதமர் அலுவலகம் இதுவரையில் எதிர்வினையாற்றவில்லை.
வரும் அக்டோபர் மாதம் கனடாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ட்ரூடோவின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் ட்ரூடோ பதவி விலகுவது தேர்தலில் லிபரல் கட்சிக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. ஏனெனில் அவருக்குப் பிறகு தலைவர் பதவிக்கு வரப்போகும் நபர் என லிபரல் கட்சியில் யாரும் அடையாளம் காணப்படவில்லை. நிலையற்ற தலைமையுடன் போட்டியிடுவது கன்சர்வேடிவ் கட்சிக்குச் சாதகமானதாக அமையும்.
ஆனால் இப்போதும் லிபரல் கட்சி பெரும் செல்வாக்குடன் இருக்கிறது எனச் சொல்லிவிட முடியாது. தற்போதுவரை கிடைத்துள்ள கருத்துக்கணிப்புகள் முழுவதுமாக லிபரல் கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டுவதால், கட்சிக்குள்ளேயே பலரும் ட்ரூடோ பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர்.
கனட அரசியலில் அமெரிக்கா உடனான உறவைப் பேணுவது மிக முக்கியமான அம்சமாகும். வரவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அரசுடன் நல்லுறவை பேண கன்சர்வேடிவ் கட்சியே சரியான தீர்வாக இருக்கும் என்ற மனநிலை நிலவுகிறது.
ட்ரூடோ உடனடியாக பதவி விலகுவாரா அல்லது அடுத்த தலைவர் பதவிக்கான நபரை சுட்டிக்காட்டுவாரா என்பது குறித்து தகவல்கள் இல்லை.