நூல் வெளியீட்டு விழாவில் சீமான்
சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 48-வது புத்தகக் கண்காட்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
இதில் கடந்த ஜனவரி 4-ம் தேதி ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் ‘நீராருங் கடலுடுத்த…’ தமிழ்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதிலாக, பாரதிதாசன் எழுதிய ‘வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே’ என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. இது புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாகும். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ஆளுநர் ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்தாய் வாழ்த்து பாடலில் இருக்கும் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரிகள் பாடப்படாமல் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக் குறித்து அப்போது கருத்துத் தெரிவித்திருந்த சீமான், ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும் தமிழ்தாய் வாழ்த்தே வேண்டாம். அதற்குப் பதிலாக பாரதிதாசனின் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக வைக்கலாம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்கு காரணம்..
மேலும், புத்தகக் கண்காட்சி அரங்கின் நுழைவு வாயிலில், கம்பர் பாதை, வள்ளுவர் பாதை, வ.உ.சி பாதை, ‘முத்தமிழறிஞர் கலைஞர் பாதை’ என பாதைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதைக் குறிப்பிட்டு ‘முத்தமிழறிஞர் கலைஞர் பாதை’ என்று பெயர் வைத்திருப்பதை, “அது நாசப்பாதை, கேடு கெட்ட, கேவலம் கெட்டப் பாதை” என்று கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார் சீமான்.
சீமானின் இந்தப் பேச்சும், ‘நீராருங் கடலுடுத்த…’ தமிழ்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதிலாக பாரதிதாசன் எழுதிய ‘வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே’ என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.
கண்டனம் தெரிவித்த பபாசி
இந்த விவகாரத்தில் சீமானைக் கடுமையாகக் கண்டித்துள்ளது சென்னை 48-வது புத்தக கண்காட்சியை நடத்தி வரும் பபாசி அமைப்பு. இதுகுறித்துப் பேசியிருக்கும் பபாசி நிர்வாகிகள், “இது அரசியல் மேடையல்ல. புத்தகக் கண்காட்சி விழாவில் அரசியல் பேசக்கூடாது என சீமானிடம் முன்பே திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தோம். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததால்தான் சீமானை அந்நிகழ்ச்சிக்கு அனுமதித்தோம். அந்நிகழ்ச்சியில் ‘நீராருங் கடலுடுத்த…’ தமிழ்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிபரப்பப்படாததற்கு அந்நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்களும், சீமானும்தான் காரணம். அதன் பதிப்பாளர்களே அதற்காக முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
சீமான், பபாசி அமைப்பின் விதிமுறைகளை மீறி அரசியல், தனிநபர் தாக்குதல் என மேடையைத் தனதாக்கிக் கொண்டுள்ளார். சீமானின் இந்தச் செயலுக்குக்காக பபாசி அமைப்பு கண்டனத்தையும், வருத்ததையும் தெரிவித்துக்கொள்கிறது.
எழுத்தாளர்கள், இலக்கியம் சார்ந்த தலைவர்களின் பெயர்களை புத்தகக் கண்காட்சி அரங்கின் பாதைகளில் வைத்துள்ளோம். அதைத் தவறாகப் பேச சீமானுக்கு உரிமையில்லை. பபாசி அமைப்பு எந்தவொரு அரசியல் சார்பும் இன்றி 48-வது முறையாக இந்தப் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. எங்களின் மேடையில் தமிழ்நாடு அரசின் முதல்வரை தாக்கிப் பேசியிருப்பதும், தமிழ்தாய் வாழ்த்தைப் புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்கது. சீமான் கண்ணியத்தை காக்கத் தவறிவிட்டார்” என்று பேசியிருக்கின்றனர்.