தமிழ்நாடு சட்டமன்றத்தின், இந்த ஆண்டின் முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி, ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாகியிருக்கிறது.
இதுகுறித்து, ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தேசிய கீதம் இசைக்குமாறு சபாநாயகரிடமும், முதல்வரிடமும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்ததாகவும், அது மறுக்கப்பட்டதால் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என அவர் வெளியேறியதாகவும் விளக்கமளித்தது.
மறுபக்கம், அரசியல் பரபரப்பைக் கிளப்புவதற்காக ஆளுநர் தொடர்ச்சியாக இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக அரசியல் கட்சிகள் விமர்சித்தன. மேலும், முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது” என்று விமர்சித்து, “எதற்காக இன்னும் இந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்?” எனக் கேள்வியெழுப்பினார்.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் ஆளுநர் மளிகை, “இன்று தமிழ்நாடு மாநிலச் சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாகத் தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரக்காலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதிலிருந்து விலக்கப்பட்டனர்.
அதற்குப் பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.” என்று பதிவிட்டிருக்கிறது.
VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…