ஃபோக்ஸ்வாகன் டைகூனில் மும்பை- மஹாபலேஷ்வர்; மலைக்க வைக்கும் மலைப்பாதை அனுபவம்! மஹாபலேஷ்வர் வரீங்களா?

ஃபோக்ஸ்வாகன் நம்மை மஹாபலேஷவருக்கு அழைத்தது. மும்பையில் இருந்து 220 கிமீ தள்ளி இருக்கிறது மஹாபலேஷ்வர். நமக்கு ஊட்டி எப்படியோ அப்படித்தான் மராட்டிய மாநிலத்தவர்களுக்கு மஹாபலேஷ்வர். மஹாபலேஷ்வரைவிட, அதற்குச் செல்ல ஃபோக்ஸ்வாகன் தேர்ந்தெடுத்துச் சொன்ன வழி நம்மை மேலும் கவர்ந்தது. ஆம், மும்பையில் இருந்து காரின் மஹாபலேஷ்வர் செல்கிறவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது பூனா ரூட். ஆனால் ஃபோக்ஸ்வாகன் தேர்ந்தெடுத்ததோ மலைப்பாதை.

இந்தப் பாதையின் வழியாக மஹாபலேஷ்வருக்குப் பயணித்தால். மேற்குத் தொடர்ச்சி மலையின் நெடிதுயர்ந்து நிற்கும் மலை முகடுகளையும், கிடுகிடு பள்ளத்தாக்குகளையும், பேரிரைச்சலோடு கொட்டும் அருவிகளையும், வழிநெடுகப் பூத்திருக்கும் காட்டுப்பூக்களையும், ஸ்ட்ராபெரித் தோட்டங்களையும், மலைக்காட்டின் பேரமைதியையும் ரசித்துக் கொண்டே செல்ல முடியும்.

பாதை ஓகே. வாகனம்? இந்த மலைப் பாதையில் தரை தட்டாமல் செல்ல, நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காராக ஃபோக்ஸ்வாகன் டைகூன் இருந்தது. கரடுமுரடான செங்குத்தான மலைப் பாதைகளில் ஏறுவதற்கும், கொண்டை ஊசி வளைவுகளில் திரும்புவதற்கும், மலைக்காற்றில் நிலை குலையாமல் நிலைத்தன்மையோடு பயணிப்பதற்கும் அது துணை நிற்கும் என்பதும் நாம் ஃபோக்ஸ்வாகனின் அழைப்பை ஏற்றதற்கு இன்னொரு முக்கிய காரணம்.

ஒரு காலை வேளையில், பரபரப்பான மும்பையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோலாபா பகுதியில் இருக்கும் நகர்ப்புறச் சாலையில் இருந்து ஒரு குழுவாக மஹாபலேஸ்வர் நோக்கிப் புறப்பட்டோம். ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ் GT மற்றும் போக்ஸ்வாகன் டைகூனின் GT போன்ற ஃபோக்ஸ்வாகன் கார்கள் கொண்ட அந்த கான்வாயில் 1 லிட்டர் TSI டைகூனில் நாமும் நம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டோம்.

Volkswagen Taigun

அரபிக்கடலின் மீது அமைக்கப்பட்டிருக்கும் அந்த 26 கிமீ நீளம் கொண்ட பாலத்தில்… இல்லை இல்லை… ரன்வேயில் நம் பயணம் டேக்ஆஃப் ஆனது. 1.612 மீட்டர் உயரம் கொண்ட கார்தான் டைகூன். என்றாலும் பலமாக வீசிய கடற்காற்றைக் கிழித்துக் கொண்டு நிலைத்தன்மையோடு…. Plantedடாக ஒரே நேர்கோட்டில் பயணித்து டைகூன் நம்மை அசத்தியது.

எதிர்க்காற்றைப் புறம் தள்ளிக்கொண்டு பயணித்த போக்ஸ்வாகன் டைகூனின் ஏரோ டையனமிக்ஸ் டிசைனின் மேஜிக் மற்றும் Electro mechanical ஸ்டீயரிங்கின் துல்லியம் இரண்டையும் அந்தப் பாலத்தில் ஒரு சேரக் காண முடிந்தது.

கடற்பாலம் முடிந்த இடம் நவிமும்பையின் துவக்கம்… ஆங்காங்கே கடைவீதிகளும் போக்குவரத்து சிக்னல்களும் மாறி மாறிக் குறுக்கிட்டதால்… கூட்ட நெரிசலை நீந்தித்தான் கடக்க வேண்டியிருந்தது. நம்முடைய டைகூன் 6 கியர்கள் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட கார்தான் என்றாலும், சட் சட்டென்று கியர்களை மாற்றி ஓட்டமுடிந்ததால், பயணக் களைப்பு தெரியவில்லை. சீட்டுகள் அகலமாகவும் நல்ல Lumbar Support கொண்டதாக இருந்ததும் அதற்கு இன்னொரு காரணம். ஹைட் அட்ஜெஸ்ட் அதுவும் பவர் சீட் அட்ஜெஸ்ட் கொண்ட சீட் என்பதால், நம் உயரத்துக்கு ஏற்ற வகையில் டிரைவரின் சீட்டை உயர்த்திக் கொண்டு பயணித்தோம். Blind Spot என்று எதுவும் இல்லாமல் சாலை தெளிவாகத் தெரிந்தது.

அங்கிருந்து நமக்கு இரண்டு சாய்ஸ். ஒன்று மும்பை-பூனா எக்ஸ்பிரஸ் வேயில் பயணிக்கலாம். அல்லது மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் தவழ்ந்தவாறு பயணிக்கலாம். நாம் ஏற்கெனவே முடிவு செய்திருந்தபடி இரண்டாவது ரூட்டைத் தேர்ந்தெடுத்து நம் கான்வாய் திரும்பியது.

Volkswagen Taigun

மலைப்பாதை என்பது கடைசி 45 கி.மீட்டர்கள்தான். ஆனால் இடையில் இருக்கும் 150 கி.மீட்டர்கள் டைகூனின் முழுத் திறமையையும் சோதனை செய்யும் சோதனைச் சாலையாகவே இருந்தது. திடீர் திடீர் என்று சாலையின் குறுக்கே கால் நடைகள் வந்தாலும், முன் சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக் இருக்கும் தைரியத்தில் ஃபோக்ஸ்வாகன் டைகூனை நம்பிக்கையோடு செலுத்தினோம்.

வழியில் சில இடங்களில் சாலையைச் செப்பணிடும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதனால் பல இடங்களில் சாலை சல்லி சல்லியாகப் பெயர்ந்திருந்தது. இருந்தாலும் காருக்குள் அதிர்வுகள் தெரியவில்லை. காரணம் ஃபோக்ஸ்வாகன் டைகூனின் முன் சக்கரங்களுக்கு Stabiliser Bar உடன் கூடிய Mcpherson suspension-ம் பின் சக்கரங்களுக்கு Twist Beam Axle-ம் கொடுத்திருந்தார்கள்.

இந்தப் பயணத்தில் Cherry on the Cake…மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதை பயணம்தான். டைகூன் நான்கு மீட்டருக்கு மேற்பட்ட கார்தான். அதாவது 4.22 மீட்டர்கள் கொண்ட கார். அகலமோ 1.76 மீட்டர். இருந்தாலும் ஃபோக்ஸ்வாகன் டைகூனின் Turning Radius 5.5 மீட்டர்தான் என்பதால், ஷார்ப்பான மலைப்பாதைகளைக்கூட பெரிய Effort எதுவும் போடாமல் ஏற முடிந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115hp சக்தியையும் 150 Nm டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது என்பதால், செங்குத்தான பாதைகளில் ஏறியபோதும் ஃபோக்ஸ்வாகனின் 1 லிட்டர் TSI இன்ஜின் சோர்வடையவில்லை. கியரைச் சட் சட்டென மாற்றி மாற்றி ஓட்டியபோதும் மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்மூத்தாகவே இயங்கியது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்காக இருந்திருந்தால், இன்னும்கூட Effort இல்லாமல் ஓட்டியிருக்க முடியும்.

1 லிட்டர் TSI இன்ஜினே இப்படி என்றால், 150hp அளவுக்குச் சக்தியும், 250Nm அளவுக்கு டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI இன்ஜின் கொண்ட டைகூன் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்ய முடிந்தது.

Caution Caution… என்று வழிநெடுக எச்சரிக்கைப் பலகைகள் வைக்க வேண்டிய அளவுக்கு எச்சரிக்கையோடு பயணிக்க வேண்டிய மலைப்பாதையாக இருந்தாலும், இதில் ஃபோக்ஸ்வாகன் டைகூனை அச்சமில்லாமல் நாம் ஓட்டிச் சென்றதற்குக் காரணம், இது பாதுகாப்பான கார் என்பதால்தான். இதில் 6 காற்றுப்பைகள், ESC, lane change indicator, Brake Assist, parking Sensors, Reverse Camera என்று நாற்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், அனைத்துக்கு மேலான பாதுகாப்பு என்பது GNCAPல் இது வாங்கியிருக்கும் 5 நட்சத்திரம்தான்.

Volkswagen Taigun

கடல் மட்டத்தில் இருந்து 4,710 அடி உயரத்தில் இருக்கும் வில்சன் பாய்ன்ட்டில் சூரிய உதயத்தைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. என்றாலும் Curcuma Yellow நிறத்தில், அதாவது மஞ்சள் நிறத்தில் நாம் கொண்டு போன டைகூன் மீது சூரியனின் மஞ்சள் வெயில் பட்டதில் அதன் புரொஜெக்டர் ஹெட்லாம்ப்ஸ், LED DRLs, கிரில், போனட், அதிலுக்கும் கீரிஸ் கோடுகள் என்று அனைத்துக்கும் அழகு கூடியது.

அடுத்து நாம் சென்ற இடம், Harrisons Folly. சுற்றிலும் கிடுகிடு பள்ளத்தாக்குகளாக இருக்க, ஒரு மலையில் இருந்து நீண்ட உள்ளங்கைபோல அந்தப் பள்ளத்தாக்கின் நடுவே அமைந்திருந்தது அந்த மலைத் திட்டு. பரபரப்பான வாழ்கையில் சிக்கிக் கொண்டிருக்கும் யார் அங்கு போனாலும் அங்கே சுயதரிசனம் கிடைப்பது நிச்சயம். நகரப்புற வாழ்கையில் தொலைத்துவிட்ட நம்மைத் திரும்பவும் கண்டுபிடித்துக் கூட்டிவர சரியான இடம் அது.

மஹாபலேஷ்வரில் இருந்து மும்பைக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்தபோது… பூனா – மும்பை ஹைவே அனுபவம் எப்படி இருக்கிறது என்று பார்க்க டைகூனை அந்த ரூட்டில் திருப்பினோம். நாம் பயணித்தது பரபரப்பான ஒரு வேலை நாளில் என்பதால்… பூனாவைத் தாண்டும் இடத்தில் மட்டும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதைத் தாண்டியதும் பழையபடியே சாலையில் கார் பறக்க ஆரம்பித்தது. மீண்டும் அடல் சேது பாலத்தின் வழியாக அரபிக்கடலை ரசித்தவாறே மும்பையின் கேட் வே ஆஃப் இந்தியா வந்து சேர்ந்தோம்.

சாகசப் பயணங்களுக்கும் கைகொடுக்க வேண்டும்; சாதாரண பயணங்களுக்கும் சரிப்பட வேண்டும்; ஸ்ட்ராங்கான பெர்ஃபாமன்ஸும் வேண்டும்; நியாயமான மைலேஜும் வேண்டும்; சீட்டுகள் பெரிதாகவும் தாராளமாகவும் இருக்க வேண்டும்; அதேசமயம் பூட் ஸ்பேஸும் அதிகமாக இருக்க வேண்டும். இப்படி எதிரும் புதிருமான அம்சங்களை ஃபோக்ஸ்வாகன் அழகாக ஒன்றிணைத்திருந்ததால், இந்த மஹாபலேஷ்வர் பயணம் மறக்க முடியாத பயணமாக அமைந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.