அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகினார். அதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார், வழக்குப்பதிந்து அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் கோட்டூரைச் சேர்ந்த தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவரைக் கைது செய்தனர். அப்போது அவர் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் நீதிமன்ற காவலில் ஞானசேகரன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மாணவியின் வழக்கை தாமாக எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.
இந்தக் குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவரின் வீட்டிலிருந்து சில சொத்து ஆவணங்கள், லேப்டாப், பட்டா கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஞானசேகரனின் மனைவிகள், அவரின் குடும்பத்தினரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையை இந்தக் குழுவினர் வீடியோவாக பதிவு செய்து வருகிறார்கள். ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸாரிடமும் ஞானசேகரன் அளித்த ஒப்புதல் வாக்குமூலம், முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
ஞானசேகரன் மீது ஏற்கெனவே பதிவான குற்றவழக்குகளையும் தூசி தட்டி எடுத்திருக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிலிருந்தும் சில தகவல்களை சேகரித்திருக்கிறார்கள். குறிப்பாக ஞானசேகரன் மீது வழிப்பறி, கொள்ளை, கடத்தல் ஆகிய வழக்குகள் மட்டும் அதிகளவில் உள்ளன. அந்த வழக்குகளில் சிக்கிய ஞானசேகரனின் கூட்டாளிகளிடமும் போலீஸார் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதோடு சிறையில் ஞானசேகரன் அடைக்கப்பட்ட போது அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் சேகரித்து வருகிறார்கள். ஞானசேகரனின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட லேப்டாப், அவரின் செல்போன் ஆகியவை சைபர் க்ரைம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வுக்குட்படுத்தி வருகிறார்கள். அதில் கிடைத்த தகவல்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அதைப் போல சொத்து ஆவணங்களை வருவாய் துறையினர், பதிவுத்துறையினர் உதவியோடு விசாரித்து வருகிறார்கள். இந்த சொத்துக்கள் எந்தக்காலக்கட்டத்தில் வாங்கப்பட்டவை, சொத்தின் உரிமையாளர்களின் விவரங்கள், யாரிடமிருந்து எவ்வளவு ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கப்பட்டன போன்ற விவரங்களையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.
ஞானசேகரன் மீது குற்றம் சுமத்தியுள்ள மாணவி அளித்த புகாரில் சார் என்று ஒரு கேரடக்டரை குறிப்பிட்டிருக்கிறார். யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு போராட்டத்தில் குதித்து வருகின்றனர். நேற்று சட்டப்பேரவைக்கு வந்த அ.தி.மு.கவினர் யார் அந்த சார் என்று தங்களின் சட்டையில் பேட்ஜ்ஜாக அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். அந்தளவுக்கு யார் அந்த சார் விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில், டி.ஜி.பி அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன், ஒரு சாரிடம் பேசியதாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்ததாகவும் சிறப்பு புலனாய்வு குழு பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை ஞானசேகரனிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும் திருப்பூரைச் சேர்ந்த ஒரு நபரும் குற்றம்சாட்டப்பட்டவராக அடையாளம் காணப்பட்டிருக்கிறார் என ஆதாரமற்ற தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையும் கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டி.ஜி.பி அலுவலகம் இப்படி செய்தி அறிக்கை வெளியிட்டப்பிறகும் எதிர்க்கட்சிகள் தரப்பில் யார் அந்த சார் என்ற கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு சமர்பிக்கும் அறிக்கையில்தான் யார் அந்த சார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.