சென்னை/ஈரோடு: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் உறவினர் நிறுவனம் உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு பூந்துறை சாலையில் உள்ள செட்டிபாளையம் என்ற இடத்தில் ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், குடிசைமாற்று வாரியம், பொதுப் பணித்துறை, காவலர் வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் அரசுப் பணிகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்நிறுவன அலுவலகத்துக்கு நேற்று காலை கோவையில் இருந்து வந்த வருமானவரித் துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரகுபதி நாயக்கன்பாளையம் என்ற இடத்தில் உள்ள இந்நிறுவன நிர்வாகியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிறுவனம் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், பணப் பரிமாற்ற விவரங்கள், வருமானவரி செலுத்திய விவரங்கள் குறித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும், கணக்கில் வராத சொத்துகள், ரொக்கம் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டதாகவும் வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிறுவனத்தின் உரிமையாளர் தமிழக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமியின் உறவினராவார். பழனிசாமியின் மகனும், ராமலிங்கத்தின் மகனும் ஒரே வீட்டில் பெண் எடுத்து சம்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்பிஎல் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் என்ற கட்டுமான நிறுவனம், பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். நிறுவனத்தின் கணக்குகள், வரி செலுத்திய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதேபோல, சென்னை சாத்தங்காட்டில் உள்ள ஜே.டி. மெட்டல் நிறுவனம் மற்றும் பூக்கடை, திருவொற்றியூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பறிமுதல் செய்த ஆவணங்கள், ரொக்கம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.