நியூயார்க்: கனடா அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணையலாம் என இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சொந்த கட்சியினரின் ஆதரவு, கூட்டணி கட்சியின் ஆதரவு உள்ளிட்டவற்றை இழந்த காரணத்தால் தனது பதவியை 53 வயதான பிரதமர் ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற நிலையில் தொடர்ந்து பல முறை அமெரிக்காவுடன் கனடா இணைய வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்து வருகிறது. அவரது சமூக வலைதள பதிவுகளும் அதை சுட்டும் வகையில் இருந்துள்ளன.
“அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைவதில் கனடாவில் வசித்து வரும் பலரும் விரும்புவார்கள். வர்த்தக ரீதியான அழுத்தங்களை அறிந்தே ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் குறையும். மேலும், ரஷ்ய மற்றும் சீன கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். ஒன்றிணைவோம். அது பெரிய தேசமாக இருக்கும்” என ட்ரம்ப் தற்போது கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காமல் உள்ளது கனடா தரப்பு.
அமெரிக்காவின் தெற்கு எல்லைப் பகுதியில் நிலவும் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்காமல் போனால் கனடா பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் ஏற்கெனவே அச்சுறுத்தியுள்ளார்.