‘யார் அந்த சார்’ என்று கேட்டாலே அரசு பதறுவது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவைக்கு நேற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள், தங்களது சட்டைகளில் ‘யார் அந்த சார்?’ என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ்களை அணிந்திருந்தனர். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்கும் விதமாக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அதிமுகவினர் இந்த பேட்ஜ்களை அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும், யார் அந்த சார்? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு கோஷங்களை எழுப்பியபடியே வெளியே வந்தனர்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக வரலாற்றில் சட்டப்பேரையில் ஆளுநர் உரையை சட்டப்பேரவை தலைவர் உரையாற்றுவது இதுவே முதல்முறை. எனவே இது சட்டப்பேரவை தலைவரின் உரையாகத்தான் பார்க்கப்படும். ஆளுநர் உரை மாற்றப்பட்டு சட்டப்பேரவை தலைவரின் உரையாக காட்சியளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஆளுநர் உரையில் என்ன இடம் பெற்றிருந்ததோ, அதுவே தான் இந்த ஆளுநர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் அரைத்த மாவையே தான் அரைத்திருக்கின்றனர்.
ஆளுநர் உரை பார்ப்பதற்கு காற்றடித்த பலூன் போன்று பெரியதாக உள்ளதே தவிர, உள்ளே எதுவும் இல்லை. புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த உரையின் மூலம் திமுக அரசு சுய விளம்பரம் தேடியிருக்கிறது. மேலும் ஆளுநர் உரையில் 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம், தரமான கல்வியை வழங்குவோம் என்றெல்லாம் அறிவித்துள்ளனர். ஆனால் 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
கருப்பை கண்டால் ஏன் அச்சம்?- இதற்கிடையே கிராமச்சாலைகளின் பெயர்களை மாற்றி, முதல்வர் ஊரக சாலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அப்படி பெயர் மாற்றம் செய்வதுதான் திமுகவின் சாதனையாக இருக்கிறது. சமீபத்தில் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாணவிகள் கருப்பு துப்பட்டாவை வெளியே வைத்துவிட்டு தான் நிகழ்ச்சிக்கு சென்றனர். அந்த அளவுக்கு முதல்வர் பயந்து போயிருக்கிறார். கருப்பை கண்டால் ஏன் முதல்வர் இவ்வளவு அச்சப்படுகிறார்?
இன்றைக்கு தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக காட்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் சிறுமிகள் முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இது மிகவும் வெட்கக்கேடானது. அண்ணா பல்கலை. விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற கேள்விக்கு ஏன் இந்த அரசு பதற்றப்படுகிறது. பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் யாரையோ காப்பாற்ற இந்த அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
ஆளுநர் சட்டப்பேரவையை புறக்கணித்துவிட்டு செல்லவில்லை. திட்டமிட்டு ஆளுநர் உரையாற்றக் கூடாது என்று ஒரு நோக்கத்தோடு செயல்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் என்ன மரபு கடைபிடிக்கப்படுகிறதோ அதே மரபைதான் தமிழ்நாடு சட்டப்பேரவை கடைபிடிக்கிறது. இதே ஆளுநர்தான் 3 ஆண்டுகளாக சட்டப்பேரவைக்கு வருகிறார். இதே நடைமுறைதானே இருக்கிறது. அதில் மாறுபட்டது ஏதும் இல்லையே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.