சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாட கூடாது – முக்கிய காரணம் இதுதான்?

India National Cricket Team, Champions Trophy 2025: இந்திய அணி கடந்த 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை வந்து தவறவிட்டது இந்திய ரசிகர்களுக்கு பெரும் கவலை அளித்தது. அதன் பின்னர் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம் நிவர்த்தியானது எனலாம். 

அதேவேளையில், தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளது. இப்படி இருக்க வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்தான் இந்திய ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை கொடுத்திருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி: பலமான இந்திய அணி

பெரும்பாலும் இது ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் கடைசி ஐசிசி தொடராக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது. எனவே, இந்த தொடரை எப்படியாவது வென்று ஐசிசி கோப்பையுடன் மூவரும் ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், இந்திய ஒருநாள் அணியும் ஓரளவுக்கு பலமான அணியாகவே காட்சியளிக்கிறது. கடந்த 2023 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி குறைந்த அளவில்தான் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இருப்பினும் இந்திய வைட்பால் அணியில் பல முன்னணி வீரர்கள் தற்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கு அதன் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சும் முக்கிய காரணம் ஆகும்.

கடந்த 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் நல்ல பார்ம் பெரிதா கைக்கொடுத்தது. அதேநிலை, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் உள்ளது. இம்முறையும் அவர்களுக்கு துணையாக கேஎல் ராகுலும், ஷ்ரேயாஸ் ஐயரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தவிர, ஜெய்ஸ்வால் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி, ரியான் பராக், ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்றவர்கள் அணியில் சேரும்போது பேட்டிங் மற்றும் ஆல்ரவுண்டர் பிரிவு பலமா்கும்.

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விளையாட வேண்டாம்

பந்துவீச்சை பார்த்தால். ஷமியும் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சிராஜ், அர்ஷ்திப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா போன்ற அனுபவ வீரர்களும், யாஷ் தயாள், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ் உள்ளிட்ட இளம் வேகங்களும் இருக்கின்றனர். இந்நிலைியில், காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாமல் இருப்பதே அவருக்கும், இந்திய அணிக்கும் நல்லது எனலாம். 

ஏனென்றால் தற்போது முதுகு பிடிப்பு காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி போட்டியின் கடைசி இன்னிங்ஸில் பும்ராவால் காயம் காரணமாக பந்துவீச முடியவில்லை. முதல் இன்னிங்ஸிலேயே களத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதில் இருந்து குணமடைய குறைந்தது ஆறு வாரங்கள் ஆகலாம் என கூறப்படும் நிலையில், பும்ராவை அவசர அவசரமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வைப்பதன் மூலம் இந்திய அணி எதிர்காலத்தில் பல போட்டிகளில் அவர் இல்லாமல் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

பும்ரா டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்தலாம்?

2024ஆம் ஆண்டு பும்ரா 13 டெஸ்டில் விளையாடி 71 விக்கெட்டுகளை குவித்திருக்கிறார். அவரின் சராசரி 14 ஆக உள்ளது, ஸ்ட்ரைக் ரேட்டும் 30 தான். எனவே இந்தியா அணி டெஸ்ட் கிரிக்கெட்டின் பக்கம் அதிக கவனம் செலுத்த விரும்பும் வேளையில், பும்ராவை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வைக்காமல் இருப்பதே நல்லது எனக் கூறப்படுகிறது. பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இங்கிலாந்து ஒருநாள் தொடரில் மட்டுமின்றி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவருக்கு ஓய்வு அளிப்பதுதான் நல்லது. 

பலருக்கும் இது வினோதமான ஒன்றாக தோன்றினாலும் இந்திய அணியின் நீண்ட கால நோக்கை கருத்தில் கொண்டு பிசிசிஐ இதை செய்ய வேண்டும் என கூறலாம். பும்ரா இனி அடுத்து சர்வதேச அளவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கினாலே போதும். இடையே ஐபிஎல் போட்டியில் விளையாடுவதும் விளையாடாததும் அவரின் கையில் இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.