சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தாலும், தொடர் 1-3 என்ற கணக்கில் முடிந்துள்ளது. இந்திய அணி வீரர் சுப்மன் கில் இந்த தொடர் முழுவதும் ரன்கள் அடிக்க சிரமப்பட்டார். அதிக ரன்கள் அடித்த முதல் 15 வீரர்களின் பட்டியலில் கூட சுப்மன் கில் இடம் பெறவில்லை. தொடர்ந்து ரன்கள் அடிக்க தடுமாறி வரும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுப்மன் கில் மீது இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்பிரமணியன் பத்ரிநாத் சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
— Prakash (@definitelynot05) January 5, 2025
ஒருவேளை சுப்மன் கில் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் எப்போதோ அணியை விட்டு நீக்கப்பட்டு இருப்பார் என்று தெரிவித்துள்ளார். “சுப்மன் கில் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால் நிச்சயம் முன்பே அணியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பார், இவ்வளவு காலம் அணியில் இருந்திருக்க முடியாது. எதிர்பார்த்த அளவிற்கு அவர் ரன்கள் அடிக்கவில்லை. நீண்ட நேரம் ஒரு வீரர் களத்தில் இருந்தாலே, வீச்சாளர்களை சோர்வடையச் செய்ய முடியும். ஆஸ்திரேலியாவின் லபுஷேன் மற்றும் மெக்ஸ்வீனி பும்ராவை எதிர்த்து சிறப்பாக விளையாடினர். ஏனெனில் அவர்கள் நீண்ட நேரம் களத்தில் இருந்தனர்.
நான் இந்த மாதிரி தான் விளையாட போகிறேன் என்று எதிரணிக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய நேச்சுரல் கேமை விளையாட வேண்டும், அதுதான் உங்களுக்கு எப்போதும் கை கொடுக்கும். சுப்மன் கில் இந்த தொடர் முழுவதும் அணிக்கு என்ன பங்களித்தார்?” என்று பத்ரினாத் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த தொடர் முழுவதும் சுப்மன் கில் மொத்தமாக 93 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார், அதில் அதிகபட்சமாக 31 ரன்கள் ஓவல் மைதானத்தில் அடித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியில் அறிமுகமான சுப்மன் கில் இதுவரை 32 டெஸ்டில் விளையாடி வெறும் 35 ஆவரேஜ் மட்டுமே வைத்துள்ளார்.