ஜல்லிக்கட்டு: `காளை வளர்த்தால் உதவித்தொகை; தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’ – கேட்கும் காளை வளர்ப்போர்

“ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை கொண்டு செல்லும்போது டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், காளை வளர்ப்போருக்கு உதவித்தொகை, வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும்” என் காளை வளர்ப்போர், வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் சில தினங்களில் நடைபெறுவதை முன்னிட்டு காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.

உலகத்தமிழரின் பண்பாட்டுத் திருநாளான பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதில் முக்கியமாக மதுரை மாவட்டத்தில் ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பல ஊர்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில்தான் சில கோரிக்கைளை மாட்டு உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் வைக்கிறார்கள். நம்மிடம் பேசிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், “தற்போதைய தமிழக முதல்வர், தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு ஒரு காளைக்கு மாதம்தோறும் ரூ. 1000 உதவித்தொகையை வழங்க வேண்டும். பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் காளைகளை வளர்ப்பவர்களுக்கு அதிகம் செலவாகிறது, அதற்கு உதவித்தொகை உதவும்.

அதுபோல் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திலேயே காயம் ஏற்பட்டால் முதலுதவி மட்டும் செய்யாமல் அதிநவீன வசதிகளுடன் மருத்துவ மையத்தை அமைத்திருக்க வேண்டும், கார், பைக் என்று பரிசு அறிவிப்பதால் வசதிபடைத்த மாட்டுக்காரர்கள் தங்கள் மாடுகளை வீரர்கள் பிடிக்காமல் இருக்க மைதானத்துக்குள் இடையூறு செய்கிறார்கள், இதை தடுக்க வேண்டும், ஜல்லிக்கட்டில் மாடுகள் மற்றும் வீரர்கள் பங்கேற்பதில் பாரபட்சம் பார்க்க கூடாது” என்றனர்.

ராமர் என்ற சேதுராமன்

பாலமேடு பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர் ராமர் என்ற சேதுராமன், “நாங்கள் மூன்று தலைமுறையாக ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வருகிறோம். நான்கு நாட்டின மாடுகளை வளர்க்கிறோம். கார்த்திகை பிறந்து விட்டாலே உற்சாகமாகி விடுவோம். எங்கள் மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம். தினமும் 2 கிலோ மீட்டர் நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி, மண் குத்துதல் பயிற்சி என அனைத்தும் வழங்குவோம். இரவு 8 மணிக்கு ஒரு கிலோ பருத்தி விதை, மக்காச்சோளம், குச்சி புண்ணாக்கு, உளுந்து அரிசியை கலந்து தீவனமாக வழங்குவோம். சக்திக்காக கூடுதலாக தினமும் பேரிச்சம்பழமும் கொடுக்கிறோம். இதனால் ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு ரூ 300 வீதம் நான்கு மாடுகளுக்கும் தினசரி 1200 ரூபாய் செலவாகிறது. சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த நாங்கள் சிரமத்திற்கு இடையில் நாட்டு மாட்டு இனங்கள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தோடு மாடுகளை வழிவழியாக வளர்த்து வருகிறோம்.

தமிழக முதல்வர், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் ஜல்லிக்கட்டு மாட்டிற்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கினால் உபயோகமாக இருக்கும். அது நாட்டு மாடு வளர்ப்போருக்கு இன்னும் ஊக்கமாக இருக்கும். மேலும் இரண்டு மாடுகள் வளர்த்து அதிக ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கு பெற வைப்போம். அதற்கு தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு மாடுகளை போட்டிக்கு வாகனத்தில் கொண்டு செல்லும்போது டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” என்றார்.

முத்துலட்சுமி

அவர் மனைவி முத்துலட்சுமி பேசும்போது “தமிழகத்தின் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் எங்கள் மாடுகள் கலந்து கொண்டு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், கட்டில், பீரோ, வாஷிங் மெஷின் என ஒரு திருமணத்துக்கு தேவையான சீர் வரிசைகளை பரிசுகளாக பெற்று வந்துள்ளது. இதுவே எங்களுக்கு ரொம்ப பெருமையாக உள்ளது, அப்படியே தமிழக அரசு உதவித்தொகையையும் வழங்கினால் சிறப்பாக இருக்கும்” என்றார்.

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று நம்புகிறார்கள்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.