டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை இன்று மதியம் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடப்பு ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி பற்றிய அறிவிப்பை இன்று மதியம் 2 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது. இதில், புதுடெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை அக்கட்சி நிறுத்தியது.

இதேபோன்று கல்காஜி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மற்றும் முதல்-மந்திரி அதிஷிக்கு எதிராக முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரியை பா.ஜ.க. நிறுத்தி உள்ளது. கரோல் பாக் மற்றும் ஜனக்புரி தொகுதிகளில் முறையே அக்கட்சியை சேர்ந்த துஷ்யந்த் குமார் கவுதம் மற்றும் ஆஷிஷ் சூட் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

காந்தி நகர் தொகுதியில், அரவிந்தர் சிங் லவ்லியையும், பிஜ்வாசன் தொகுதியில், ஆம் ஆத்மியின் முன்னாள் தலைவர் கைலாஷ் கெலாட்டையும் அக்கட்சி நிறுத்தி உள்ளது. முன்னாள் டெல்லி பா.ஜ.க. தலைவர் சதீஷ் உபாத்யாய், மாளவியா நகரில் இருந்து போட்டியிட உள்ளார்.

இந்த சூழலில், இந்திய தேர்தல் ஆணையம் புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று மதியம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறது. இதில், தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.