புதுடெல்லி: 70 சட்டப்பேரவைகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி – 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சட்டப்பேரவை பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், “வேட்புமனு தாக்கல் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 17. வேட்புமனுக்கள் ஜனவரி 18-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20-ம் தேதி கடைசி நாள். தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.” என அறிவித்தார்.
மேலும் அவர், “டெல்லி தேர்தலில் பண பலம் தடுக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். முறையான சோதனைகள் நடத்தப்படும். சமூக ஊடகங்களை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். பொய் செய்திகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படும்.” என தெரிவித்தார்.
100 கோடியை நெருங்கும் வாக்காளர்கள்.. முன்னதாக செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ராஜிவ் குமார், “இன்று மேலும் நான்கு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டதன் மூலம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 99 கோடியை தாண்டியுள்ளது. வாக்களிப்பு, பெண்கள் பங்கேற்பு ஆகியவற்றில் புதிய சாதனைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். விரைவில் 100 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் என்ற புதிய சாதனையை இந்தியா பெறும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதலை மேற்கொள்வதில் ஒரு முறையான செயல்முறை கடுமையாக பின்பற்றப்படுகிறது. தனிப்பட்ட விசாரணை இல்லாமல் பெயர்களை நீக்குவது சாத்தியமற்றது. ஜனநாயகத்தில் உள்ளார்ந்த கேள்விகளை கேட்பதற்கு உரிமை உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் (ஈவிஎம்) வைரஸ் நுழைய முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை. மேலும், இவிஎம்-ல் மோசடிக்கும் சாத்தியமில்லை. இதை உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் வெவ்வேறு தீர்ப்புகளில் தொடர்ந்து கூறி வருகின்றன. இவிஎம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.
வாக்குப்பதிவு விவரங்களை மாற்றுவது மற்றும் வாக்காளர் எண்ணிக்கையை மாற்றுவது ஆகியவற்றுக்கு சாத்தியமில்லை. மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு அதிகரிப்பதாக தவறான கருத்து பரப்பப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று 42 முறை நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. ஹேக் செய்ய முடியும் என கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது.” என தெரிவித்தார்.
மேலும், தலைமை தேர்தல் ஆணையராக இதுவே எனது கடைசி செய்தியாளர் சந்திப்பு என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டார்.
மும்முனைப் போட்டி: டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டிக்கு அரசியல் களம் காத்திருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அங்கே கட்சித் தாவல்கள், காரசார வாக்குவாதங்கள் என அரசியல் களம் களை கட்டியுள்ள நிலையில் இன்று தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் கடும் குளிருக்கு இடையேயும் அரசியல் களத்தில் அனல் பறக்கும்.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.