புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு தனக்கான முதல்வர் வீட்டை மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒருநாளைக்கு முன்பாகவே வெளியேறும் அறிவிப்பு தனக்கு வழங்கப்பட்டதாக அவர் சாடியுள்ளார்.
கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஊடகத்தினரிடம் பேசிய முதல்வர் அதிஷி கூறுகையில், “டெல்லி பேரவைக்கான தேர்தல் இன்றுதான் அறிவிக்கப்பட்டது. மூன்று மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்றிரவே மத்திய பாஜக அரசு என்னை அதிகாரபூர்வ முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியேற்றிவிட்டது. அவர்கள் கடிதத்தின் மூலமாக முதல்வருக்கான இல்ல ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் இல்லத்தைப் பறித்துக்கொண்டனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பும் இதையே அவர்கள் செய்தார்கள், நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது பாஜகவினர் எனது உடமைகளை வீதியில் தூக்கி வீசினர். வீடுகளைப் பறித்துக்கொள்வதன் மூலம், எங்களைத் துஷ்பிரயோகம் செய்வதன் மூலம், எங்கள் குடும்பத்தினரைப் பற்றி கீழ்தரமாக பேசுவதன் மூலம் எங்களின் பணிகளைத் தடுத்து நிறுத்தி விடமுடியும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால், டெல்லி மக்களுக்காக வேலை செய்யும் எங்களின் வேட்கையை அவர்களால் தடுக்க முடியாது. தேவைப்பட்டால் டெல்லி மக்களின் வீடுகளுக்குச் சென்று தங்கி அவர்களுக்காக வேலை செய்வேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் மகிளா சம்மன் யோஜனா மூலம் ரூ.2,100 கிடைப்பதை உறுதி செய்வேன் என்று நான் உறுதி ஏற்றுள்ளேன். ஒவ்வொரு அர்ச்சகரும் மதிப்பூதியத் தொகையாக ரூ.18,000 பெறுவர். சஞ்சீவினி யோஜனா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு முதியவருக்கும் இலவச சிகிச்சை கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அதிஷிக்கு வழங்கப்பட்டுள்ள வீடு ரத்துக் கடிதத்தில், அவர், ராஜ் நிவாஸ் லேனின் சிவில் லைனில் உள்ள பங்களா எண் 2 அல்லது தார்யகஞ்சின் அன்சாரி சாலையில் உள்ள பங்களா எண் 115 இரண்டில் ஒன்றினைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறையினரின் ஆதாரங்களின் படி, முதல்வராக அதிஷி பதவி ஏற்ற ஒருவார காலத்துக்குள் அவர் முதல்வர் இல்லத்தில் குடியேற வேண்டும். ஆனால், மூன்று மாதங்களாகியும் அவர் அதைச் செய்யவில்லை அதனால் அவருக்கான வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டள்ளது.
இதுகுறித்து தகவலறிந்தவர்கள் கூறும்போது, “அதிஷிக்கு முதல்வருக்கான வீடு ஒதுக்கும்போதே 6, ஃப்ளாக் ஸ்டாஃப் வீடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் விசாரணை நிறுவனங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததது. அவர் வேண்டுமென்றே அந்த வீட்டில் குடியேறவில்லை அதனால் வீடு பூட்டியே உள்ளது விசாரணையும் முடங்கியே உள்ளது” என்று தெரிவித்தனர்.
இருந்த போதிலும், ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங், டெல்லி முதல்வர் வீடு பற்றிய பாஜகவின் குற்றச்சாட்டுக்களை மறுத்தார். மேலும் பிரதமர் மோடியை சாடினார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய சஞ்சய் சிங், “அவர்கள் (பாஜகவினர்) டெல்லி முதல்வர் வீட்டில் தங்க முலாம் பூசப்பட்ட கழிவறை மற்றும் நீச்சல் குளம் இருப்பதாக நம்பினால், அதனை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்று நான் அவர்களுக்குச் சவால் விடுகிறேன். நாளை காலை 11 மணிக்கு நாம் ஊடகத்தினருடன் முதல்வர் இல்லத்துக்குச் செல்வோம். அங்கு போய் இவர்கள் சொல்பவை இருக்கிறதா என்று பார்ப்போம் அப்போது உண்மை தெரிந்துவிடும்.
பிரதமர் மோடி ரூ.2,700 கோடி மதிப்பிலான இல்லத்தில் வசிக்கிறார். நாளொன்றுக்கு மூன்று முறை அவர் உடை மாற்றுகிறார். ரூ.10 லட்சம் மதிப்பிலான பேனா வைத்துள்ளார். அவரது ராஜ்மஹாலில் ரூ.300 கோடி மதிப்பிலான, தங்க இழைகளால் நெய்யப்பட்ட கம்பளம் உள்ளது அவற்றை நாட்டுக்கு காட்டச் சொல்லுங்கள். அவர் வைத்துள்ள 5000 உடைகளைக் காட்டச் சொல்லுங்கள்” என்று தெரிவித்தார்.
முதல்வர் அதிஷியின் குற்றச்சாட்டை பாஜகவின் அமித் மாளவியா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “டெல்லி முதல்வர் அதிஷி பொய் சொல்கிறார். அவருக்கு கடந்த ஆண்டு அக்.11-ம் தேதி 6, ஃப்ளாக் ஸ்டாஃப்பில் உள்ள ஷீஸ்மஹால் ஒதுக்கப்பட்டது. அரவிந்த் கேஜ்ரிவால் காயப்படுத்த விரும்பாத அவர் அங்கு இன்னும் குடியேறவில்லை. அதனால் அவருக்கான வீடு ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவருக்கு இரண்டு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.