`தவறான எண்ணத்துடன் கையைப் பிடித்தார்'- நடிகை ஹனி ரோஸ் புகார்; தொழிலதிபர் மீது வழக்கு

கேரளாவைச் சேர்ந்த நடிகை ஹனி ரோஸ் பல்வேறு தனியார் நிறுவனங்களின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு வருகிறார். ஒரு திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது அந்த நிறுவன உரிமையாளரான தொழில் அதிபர் இரட்டை அர்த்தத்தில் பேசி தன்னை அவமானப்படுத்தியதாக ஹனி ரோஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு அந்த நபருக்கு சொந்தமான நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கு செல்ல மறுத்ததாகவும் நடிகை ஹனி ரோஸ் கூறியிருந்தார். இதுகுறித்து நடிகை ஹனி ரோஸ் ஃபேஸ்புக்கில் வெளிப்படையாகப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு பலர் மோசமான கமென்ட்களை பதிவிட்டனர். இதையடுத்து ஹனி ரோஸ் அளித்த புகாரின் அடிப்படையில் ஆபாசமாக கமென்ட் செய்த 27 பேர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தன்னை அவமானப்படுத்தியது பிரபல தொழில் அதிபர் போபி செம்மண்ணூர் என நடிகை ஹனி ரோஸ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

தொழிலதிபர் போபிசெம்மண்ணூர்

பொது மேடையில் வைத்து பெண்மையை கழங்கப்படுத்தும் விதமாகவும், தொடர்ச்சியாக ஆபாசமாக விமர்ச்சித்ததாகவும் போபி செம்மண்ணூர் மீது எர்ணாகுளம் சென்ட்ரல் போலீஸில் ஹனி ரோஸ் புகார் அளித்திருந்தார். அதில்,  2024 ஆகஸ்ட் 7-ம் தேதி கோழிக்கோட்டில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அந்த சமயத்தில் போபி செம்மண்ணூர் தனக்கு நெக்லஸ் அணிவித்ததுடன், கையை பிடித்து சுற்றினார் எனவும் புகாரில் கூறியிருந்தார்.

அவர் தன்னையும், வேறு பெண்களையும் ஆபாசமாக கமெண்ட் அடிக்கும் வீடியோவையும் ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருந்தார்.

நடிகை ஹனி ரோஸ்

ஹனி ரோஸ் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் போபி செம்மண்ணூருக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்மையை கழங்கப்படுத்துதல், ஐடி ஆக்ட் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மீடியாக்களிடம் பேசிய ஹனி ரோஸ், “எச்சரிக்கை செய்தும் தொடர்ச்சியாக அவர் அப்படி செயல்பட்டதால்தான் புகாரளித்தேன். இவ்வளவு நாட்களாக என் பெயரைச் சொல்லித்தான் மோசமான கமென்ட்களைக் கூறினர். எனவே நான் ஒரு புகார் அளித்துள்ளதால், என் பெயருடன் அதுகுறித்த செய்திகள் வெளியாக வேண்டும்” என்றார்.

தொழில் அதிபர் போபிசெம்மண்ணூர்

இதுகுறித்து தொழிலதிபர் போபி செம்மண்ணூர் கூறுகையில், “நான் தவறான எண்ணத்துடன் அவரை அணுகவில்லை. திறப்புவிழாவுக்கு வரும்போது நகைகள் அணிவிப்பதும், கையில் வளையல் போடுவதும் பலமுறை செய்துள்ளேன். நான் மோசமான எண்ணத்துடன் அதைச் செய்யவில்லை. அவர் எதற்காக திடீரென புகார் கொடுத்தார் எனத் தெரியவில்லை. நான் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. என்னிடம் நேரடியாக அவர் இதுபற்றி சொல்லவில்லை. இதுபோன்ற விஷயங்களை செய்யக்கூடாது என மேலாளரிடம் கூறியிருக்கிறார். மோசமாக நான் எதுவும் கூறவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.