புதுச்சேரி: திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இந்தி சொல்லி தரும் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்திவிட்டு அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் இந்தி படிக்கக்கூடாது என்பதுதான் சமூக நீதியா என்று அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி பாஜக மாநில தலைவர் தேர்வு செய்வது சம்பந்தமாக அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவியும் புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளருமான வானதி சீனிவாசன், புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளருமான நிர்மல் குமார் சுரானா மற்றும் பாஜக மாநில தலைவர் தலைவர் செல்வகணபதி ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பாஜக மகளிர் அணி தலைவிவானதி சீனிவாசன் கூறியதாவது:
புதுச்சேரி மாநில தலைவரை தேர்வு செய்ய நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அக்குறிப்புகள் கட்சித் தலைமைக்கு அனுப்பப்படும். கடந்த தோல்வி பற்றி பேசவில்லை. புதிய தலைவர் மற்றும் நிர்வாக அமைப்பு அமைந்த பிறகு கட்சி நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமை முடிவு எடுக்கும். டெல்லி தேர்தல் பிரச்சாரத்துக்கான பணியை கட்சி துவக்கி விட்டது.
அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் நிகழ்வுக்கு வரும்போது, நிறைவடைந்து செல்லும்போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அதை ஆளுநர் ரவி வலியுறுத்துகிறார். தமிழ்த்தாய் வாழ்த்து நிச்சயம் பாடப்பட வேண்டும். அதற்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். இதை வேண்டுமென்றே ஆளுநர் மீதான காழ்ப்புணர்ச்சியாக மாநில அரசு செயல்படுகிறது. இது முதல் முறை அல்ல. ஆளுநரை வசைப்பாடுவது, அநாகரிகமாக அமைச்சர்களே பேசுகிறார்கள். திட்டமிட்டு மரியாதைக்குறைவாக ஆளுநரை நடத்த வேண்டும் என்பது நோக்கமாக இருக்கும் என்பது எங்கள் சந்தேகம்.
உயர்கல்விக்கு அதிக நிதியை மத்திய அரசு தருகிறது. மத்திய பல்கலைக்கழகம் போல் மாநில பல்கலைக்கழகம் தமிழக அரசு உருவாக்கலாம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது ஏன் என்று பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு பெற்றோர் ஏன் குழந்தைகளை அனுப்ப மறுக்கிறார்கள், பெற்றோர் வருவாயில் 30 சதவீதம் தமிழகத்தில் பள்ளிக்கல்விக்கே செல்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் பெருக காரணம் என்ன? நல்ல தரமான பள்ளிக்கல்வியை 12-ம் வகுப்பு வரை திமுக அரசு ஏன் அரசு பள்ளிகளில் தரவில்லை.
நான் அரசு பள்ளியில் படித்தேன். முன்பு 300 குழந்தைகள்படித்தோம். தற்போது 50 பேர் கூட படிக்கவில்லை. திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இந்தி சொல்லி தரும் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்துகிறார்கள். இவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி சொல்லி தருகிறார்கள். அதுவே அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் இந்தி படிக்கக்கூடாது என்பதுதான் சமூக நீதியா? ஏழை குழந்தைகள் 3-வது மொழி கற்கமுடியாதா? பணம் வாங்கிக்கொண்டு இந்தி கற்று தருகிறார்கள். இதுதான் சமூகநீதி என்று திமுக அரசு ஏமாற்றுகிறது என்றார்.