ஆம்புலன்ஸ் மோதியதில் 3 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூரில் இருந்து ஒரு குழுவினர் மஞ்சள் ஆடை தரித்து ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு புறப்பட்டனர். இவர்கள் கும்பலாக பீலேர் பகுதி வழியாக நந்து வந்து கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை இந்த குழுவினர் திருப்பதி அருகே சந்திரகிரி மண்டலம், நரசிங்காபுரம் எனும் இடத்தில் வரிசையாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அதே சமயம், மதனபல்லியில் இருந்து அவசர அவசரமாக 108 எண் கொண்ட ஆம்புலன்ஸ் திருப்பதி நோக்கி ஒரு நோயாளியுடன் வந்து கொண்டிருந்தது. அதிகாலை கடும் பனி பொழிவு இருந்த காரணத்தினால், எதிரே வரும் வாகனங்களும் தெரியாத நிலையில், நடந்து சென்று கொண்டிருந்த இவர்கள் மீது அந்த ஆம்புலன்ஸ் வாகனம் மோதியது.
இந்த கோர விபத்தில் அன்னமைய்யா மாவட்டம், சம்பாலபல்லியை சேர்ந்த பெத்த ரெட்டம்மாள் (40), லட்சுமம்மாள் (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் மூவரையும் அதே ஆம்புலன்ஸில் திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் பக்தர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. இது தொடர்பாக சந்திரகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.