சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நேற்றுமுன்தினம் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் மாநில காவல் துறையைச் சேரந்த கான்ஸ்டபிள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இவர்களது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் உயிரிழந்த வீரர்களின் சவப்பெட்டியை சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து தியோ சாய் கூறுகையில், “நக்சலைட்டுகளின் கோழைத்தனமான ஈவுஇரக்கமற்ற தாக்குதலில் 8 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர ஓட்டுநர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவர்கள் அனைவருக்கும் எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். அவர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது. சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக அவர்கள் தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர்” என்றார்.
பீஜப்பூர் மாவட்டம் பஸ்தர் டிவிஷனில் குட்ரு-பெட்ரி வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த காவல் துறை வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் கடந்த திங்கள்கிழமை மதியம் 2.30 மணிக்கு கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 2026-ம் ஆண்டுக்குள் நக்சலிசத்தை இந்திய மண்ணிலிருந்து ஒழிப்போம் என்று எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.