புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெல்வோம் என்று டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொண்டர்களும் முழு பலத்துடனும் உற்சாகத்துடனும் களத்தில் இறங்க தயாராக உள்ளனர். தொண்டர்கள்தான் எங்களின் மிகப்பெரிய பலம். இந்த தேர்தல், செயல்பாடுகள் சார்ந்த அரசியலுக்கும் துஷ்பிரயோக அரசியலுக்கும் இடையில் நடக்கும் போட்டி. டெல்லி மக்கள் எங்களின் செயல்பாட்டு அரசியலில் நம்பிக்கை வைத்திருப்பார்கள். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.
தேர்தலை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆம் ஆத்மி கட்சி செய்துள்ளதாக டெல்லி அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். “டெல்லி மக்கள் இதற்காகத்தான் காத்திருக்கிறார்கள். அரவிந்த் கேஜ்ரிவால் அரசை மக்கள் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கட்சியின் 70 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாங்கள் தேர்தலுக்கு முற்றிலும் தயாராக இருக்கிறோம்” என்று கோபால் ராய் கூறியுள்ளார்.
புதுடெல்லி சட்டமன்றத் தொகுதியில் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மாவை பாஜக நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய தலைநகரில் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் பணிகள் முடியும் வரை இது அமலில் இருக்கும்.
2025-ம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக ஜனவரி 6ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்தில் (என்சிடி) மொத்தம் 1,55,24,858 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கடந்த 2 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் படுதோல்வியைச் சந்தித்து எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. 2020 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆதிக்கம் செலுத்தியது, பாஜக 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.