புதுடெல்லி: பாலியல் வனகொடுமை வழக்கில் 11 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஆசாராம் பாபுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக வரும் மார்ச் மாதம் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை ஆசாரம் பாபு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர், ஜோத்பூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். குஜராத்தில் உள்ள காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம் ஜனவரி 2023ல் மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்நிலையில், தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வேகமாக மோசமடைந்து வருவதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் ஆசாரம் பாபு ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் சார்பில் வழக்கறிஞர்கள் ராஜேஷ் இனாம்தார் மற்றும் ஷாஷ்வத் ஆனந்த் ஆகியோர் மனுவை தாக்கல் செய்தனர். “எனக்கு 85 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. நான் எனது வாழ்வின் அந்திம காலத்தில் இருக்கிறேன். தொடர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான விருப்பமான மருத்துவமனை மற்றும் மருத்துவரிடம் சிகிச்சை பெற என்னை அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், நான் சிறையிலேயே இறக்க நேரிடும்.
நான் ஏற்கனவே 11 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டேன். நான் குற்றவாளியா அல்லது விசாரணைக் கைதியா என்பதைப் பொருட்படுத்தாமல் எனக்கு உடனடியாக ஜாமின் வழங்க வேண்டும்” என்று ஆசாராம் பாபு தனது மனுவில் தெரிவித்திருந்தார். மேலும், தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தார்.
ஆசாராம் பாபு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், ஆசாராம் பாபுவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உயிர் பிழைத்தவரின் சாட்சியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும், இந்த வழக்கில் பல முரண்பாடுகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பது அவசியம் என்று வாதிட்டார்.
குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆசாராம் பாபுவின் மனுவை எதிர்த்தார். சிறையில் அவருக்கு போதுமான மருத்துவ வசதிகள் உள்ளன என்று வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எம்.எம். சுந்திரேஷ் மற்றும் நீதிபதி ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. அதேநேரத்தில், மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே ஜாமீன் வழங்குவதாக தெளிவுபடுத்தியது.
மார்ச் 31 வரை இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், ஆசாராம் பாபு தனது சீடர்களை சந்திக்க தடை விதித்தது. மேலும், ஜாமீன் கால அவகாசம் முடிவடைவதற்கு முன் ஆசாராம் பாபுவின் உடல்நிலையை மறுமதிப்பீடு செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.