புதுடெல்லி: பாலியல் வழக்கில் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் பஜ்ரங் தளம் அமைப்பின் தலைவர் தேடப்பட்டு வந்தார். தன் மீதானப் புகாரை எதிர்த்து காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயற்சித்தவரை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
உ.பி.யின் கான்பூர் மாவட்ட பஜ்ரங்தளம் அமைப்பாளராக இருந்தவர் திலிப்சிங் பஜ்ரங்கி. இவர் கலெக்டர் கஞ்ச்சிலுள்ள இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. அப்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த, திலிப் பஜ்ரங்கி தனது விருப்பத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்ளும்படி அவ்வப்போது மிரட்டியதாக கூறப்படுகிறது.
இவரால் பாதிக்கப்பட்ட அந்த பெண், கடந்த நவ.5-ம் தேதி, கலெக்டர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமறைவான திலீப் பஜ்ரங்கி, திடீரென கலெக்டர்கஞ்ச் காவல் நிலையம் முன்பு வந்தார். பஜ்ரங்தளம் அமைப்பின் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தவர் தன் மீதான புகாரை வாபஸ் பெறக் கோரி, பெட்ரோலை மேலே ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அதை தடுத்து நிறுத்திய போலீஸார் அவரை கைது செய்தனர். தற்கொலை முயற்சி தொடர்பாக அவர் மீது மேலும் ஒரு வழக்கை போலீஸார் பதிவு செய்தனர்.
இதுகுறித்து கான்பூர் நகர எஸ்பியான பாபூர்வா அஞ்சலில் விஷ்வகர்மா கூறும்போது, ‘தன் மீதானப் புகாருக்கு பின் திலிப்சிங் கடந்த 2 மாதங்களாக தலைமறைவானார். இவர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மணமுடிப்பதாக ஆசைகாட்டி, கண்டாகர் பகுதியின் ஒரு ஓட்டலில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த காட்சிகளை தனது செல்போனில் ரகசியமாக பதிவு செய்து. அவற்றை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.’ என்று கூறினார்.
கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்ட திலீப்சிங் பஜ்ரங்கி மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், சமூக வலைதளத்தில் அவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட காட்சிப் பதிவுகள் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.