பாட்னா: அனுமதி இன்றி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த ஜன் சூராஜ் கட்சித் தலைவர் பிசாந்த் கிஷோர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை பாதிப்பு அடைந்ததால் நேற்றிரவு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜன் சூராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் பிஹாரின் காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்தார். அனுமதி இன்றி சட்டவிரோதமாக உண்ணாவிரதம் இருந்த காரணத்துக்காக அவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அதேநாளில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்.
இதனிடையே, நேற்றிரவு அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், அவரது கட்சிக்காரர்கள் அவரை மருத்துவமனைக்கு செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.
தொடர் வலியுறுத்தலுக்கு பின்பு, பிரசாந்த் கிஷோர் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்குச் செல்ல ஒப்புக்கொண்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர், “பிரசாந்த் கிஷோர் நீரிழப்பு, தொண்டைத் அலர்ஜி, இரைப்பை பிரச்சினை மற்றும் உடல் பலவீனம் உள்ளிட்ட பல்வேறு உடல்நல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்” என்றார். இதனிடையே தண்ணீரைக் குடித்து விட்டு தனது போராட்டத்தை தொடரப்போவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
பாட்னாவின் காந்தி மைதானத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வந்த ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோரை, திங்கள்கிழமை போராட்ட இடத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தது. பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 150 பேர் மீதும் மாவட்ட நிர்வாகத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஜாமீனுக்கு பின்பு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரசாந்த் கிஷோர், “என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது. அதில் நான் எந்த விதமான தவறும் செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் நான் அதில் கையெழுத்திடாமல் நிராகரித்தேன். சிறைக்குச் செல்ல சம்மதித்தேன்” என்று தெரிவித்திருந்தார்.
பிபிஎஸ்சி ஒருங்கிணைந்த முதன்மை போட்டித் தேர்வு கடந்த டிசம்பர் 13-ம் தேதி மாநிலம் முழுவதும் 912 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அந்த தேர்வை ரத்து செய்யக் கோரி பாட்னாவின் காந்தி மைதானத்தில் ஜன் சூராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடந்த 2ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மத்தியில், முறைகேடு நடந்த 22 மையங்களில் கடந்த 4-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. 12,012 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 5,200 பேர் மட்டுமே தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.