போலி இணையதளம் மூலம் BSNL பெயரில் மோசடி…. பலியாக வேண்டாம் என எச்சரிக்கை

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மோசடி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன வழிகளில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற புதிய வழியைக் கண்டுபிடிக்கின்றனர். பிஎஸ்என்எல் டவர் என்ற பெயரில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது தொடர்பாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பிஎஸ்என்எல் விடுத்துள்ள எச்சரிக்கை

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், பிஎஸ்என்எல் என்ற பெயரில் ஒரு போலி இணையதளம் செயல்பட்டு வருகிறது என்றும், மொபைல் டவர்களை நிறுவுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை காட்டி, போலியான திட்டங்கள் குறித்த தகவல்களை பயனாளிக்கு அளித்து மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிபலர் தங்கள் இடங்களில் மொபைல் டவர்களை நிறுவ விரும்புகிறார்கள். BSNL நிறுவனம் ஒவ்வொரு மாதமும் மொபைல் டவர்களை நிறுவப்பட்ட இடத்திற்கு சொந்தமானவர்களுக்கு பணம் செலுத்தும் என்று கூறி, இதற்கான பணம் வசூலித்து மோசடி செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர் என எச்சரித்துள்ளது.

போலி இணையதளம்

bsnltowersite.in என்ற இணையதளம் உள்ளது. இதன் பெயர் மற்றும் முகப்புப் பக்கத்தைப் பார்த்தால் இது BSNL-ன் இணையதளம் என்று தோன்றலாம். ஆனால் அது உண்மை இல்லை. இது போலியான இணையதளம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பிஎஸ்என்எல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

X  தளத்தில் வெளியிடப்பட்ட எச்சரிக்கை

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL சமூக ஊடக தளமான X  தள பதிவில், bsnltowersite.in என்ற இணையதளம் போலியானது என்றும், இது BSNL உடன் தொடர்புடையது அல்ல என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனம் பயனர்கள் இந்த வலைத்தளத்தை எளிதாக அடையாளம் காண போலி வலைத்தளத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.

வளர்ந்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம்

இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ , ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை, கடந்த ஜூலையில் தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் அதிகரித்ததிலிருந்து, பல மொபைல் சந்தாதாரர்கள் BSNL நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.