பஞ்சாப்: பஞ்சாபில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து திருமண விழாக்களில் மதுபானம் வழங்குவதை தவிர்ப்பது மற்றும் டி.ஜே. போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடாத குடும்பங்களுக்கு ரூ. 21,000 பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம பஞ்சாயத்து, தங்களது பாரம்பரியத்தை மேம்படுத்தும் வகையில், திருமண விழாக்களில் மதுபானம் வழங்குவதை தவிர்ப்பது மற்றும் டி.ஜே போன்ற இசை நிகழ்ச்சியை நடத்த ஊக்குவிக்காத குடும்பங்களுக்கு 21,000 ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல்லோ கிராமத்தில் சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர். கிராமங்களில் திருமணங்களின்போது டிஜே இசைக்கப்படுவது, மதுபானம் பரிமாறப்படுவது சண்டைக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு இம்முடிவை அக்கிராம மக்கள் எடுத்துள்ளனர். மேலும், உரத்த இசை மாணவர்களின் படிப்பையும் பாதிக்கிறது என்கின்றனர்.
இது குறித்து அக்கிராம மக்கள் கூறும்போது “ஆடம்பரமான திருமணங்கள் குடும்பங்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. திருமண நிகழ்ச்சிகளின்போது வீண் செலவுகளில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். இயற்கை விவசாயத்தை தேர்வு செய்யும் விவசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கப்படும். கிராமத்தில் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளன” என்றார்.