விராட், ரோகித் செய்ததை மறந்து விடக்கூடாது – இந்திய முன்னாள் வீரர் ஆதரவு

மும்பை,

ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பையை பறிகொடுத்தது. அத்துடன் முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது.

இந்த தொடரில் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது செயல்பாடு மெச்சும்படி இல்லை. டெஸ்டில் ரோகித் சர்மா கடைசி 15 இன்னிங்சில் 164 ரன் மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். விராட் கோலி பெர்த் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் அடித்த சதத்தை தவிர்த்து பார்த்தால் கடைசி 14 இன்னிங்சில் 183 ரன்களே எடுத்திருக்கிறார். இழந்த பார்மை மீட்க இவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் கம்பீர், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஆதரவாக பேசியுள்ள இந்திய முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கூறுகையில், “நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி தோற்றது எனக்கும் தனிப்பட்ட முறையில் வருத்தம்தான். ஆனால் கடந்த 5-6 ஆண்டுகளில் நமது அணி பெற்ற வெற்றிகளை நினைத்துப் பாருங்கள். ஆஸ்திரேலிய தொடரை கூட நாம் இரண்டு முறை அவர்களது நாட்டில் வென்றுள்ளோம். எனக்கு தெரிந்தவரை மற்ற எந்த ஒரு அணியும் அதனை செய்தது கிடையாது.

தற்போது ரசிகர்கள் பலரும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை விமர்சித்து பேசுகின்றனர். ஆனால் அவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அவர்கள் இருவருமே தலைசிறந்த வீரர்கள். எனக்கும் அவர்களது இந்த மோசமான பேட்டிங் பார்ம் வருத்தம் அளிக்கிறது. ஆனால் நிச்சயம் அவர்கள் இருவருமே அதிலிருந்து மீண்டு வருவார்கள்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.