2025 புத்தாண்டு நாளில் பிறந்த இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை

2025 புத்தாண்டு நாளில் இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை பிறந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 12.03 மணிக்கு பிறந்த பெண் குழந்தை இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை என்று அறியப்படுகிறது. மிசோரம் மாநிலம் அய்ஸ்வாலில் பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு ஃப்ராங்கி ரெமுராடிகா ஜடேங் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தை பிறக்கும்போது 3.12 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மகப்பேறு மருத்துவர் வன்லாகிமா குழந்தைப் பேறு அறுவை சிகிச்சை இன்றி இயல்பாக நடந்தது என்றும் தாயும் சேயும் நலம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதென்ன ஜென் பீட்டா குழந்தை? ‘ஜென் பீட்டா’ என்ற பதத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எதிர்காலஞ்சார் ஆராய்ச்சியாளர் மார்க் மெக் கிரிண்டில் உருவாக்கியுள்ளார். 2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆன் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் ‘ஜென் பீட்டா’ குழந்தைகள் என அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறுகிறார். இவர்கள் மில்லனியல்ஸ் என்றழைக்கப்படும் ஜென் y அல்லது ஜென் z பெற்றோர்களுக்குப் பிறப்பவர்கள். 2035 ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் ‘ஜென் பீட்டா’ தலைமுறையினராக இருப்பார்கள். இவர்கள் பங்களிப்பு சர்வதேச சமூக, பொருளாதார சூழலில் முக்கியத்துவம் வகிக்கும் என்று மெக் கிரிண்டில் கணிக்கிறார்.

இவர்களைப் பற்றி மெக் கிரிண்டில் தனது வலைப்பக்கத்தில், “டிஜிட்டல் உலகமாக மாறிவிட்ட இந்த புவியில் கல்வி, பணியிடம், பொழுதுபோக்கு என எல்லாவற்றிலும் செயற்கை தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் காலத்தில் ஜென் பீட்டாவினர் வாழ்வர். இந்த தலைமுறையினர் இது வரை இல்லாத அளவில் முற்றிலும் டிஜிட்டல் வாசிகளாகவே இருப்பர்.

2011 முதல் 2024 வரை பிறந்தோருக்கு ஜென் ஆல்ஃபா என்றும் 2025 முதல் 2039 ஆம் ஆண்டு வரை பிறப்போருக்கு ஜென் பீட்டா என்றும் கிரேக்க பதங்களை கொடுத்ததற்கு காரணம் இருக்கிறது. இவர்கள் முற்றிலும் மாறுபட்ட உலகில் வசிக்கக் கூடியவர்கள் என்பதால் கிரேக்க அகரமுதலியால் இவர்களைக் குறித்துள்ளேன். தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் ஆல்ஃபா, பீட்டா தலைமுறையினர்.

அதுவும் ஜென் பீட்டா தலைமுறை நாம் எப்படி வாழப்போகிறோம், எப்படி வேலை செய்யப்போகிறோம், எப்படி ஒருவொருக்கொருவர் பழகிக் கொள்ளப் போகிறோம் என எல்லாவற்றிலும் மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்தும். புத்தாக்கம், புதிய தொழில்நுட்பத்துக்கும் தகவமைத்துக் கொள்ளுதல், மாறுபட்ட மாற்றத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம். ” என்கிறார்.

தலைமுறை ஆண்டு பன்புகள்
பேபி பூமர்ஸ் 1946–1964 போருக்குப் பிந்தைய வளம், குடும்பம் மீதான கவனம், பொருளாதார வளர்ச்சியில் நாட்டம்
ஜெனரேஷன் X 1965–1980 சுதந்திர எண்ணம் கொண்டவர்கள், தகவமைத்துக் கொள்ளும் தன்மை, தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்பவர்கள்
மில்லனியல்ஸ்(Gen Y) 1981–1996 டிஜிட்டல் முன்னோடிகள், கூட்டுமுயற்சிக்கு தோதானவர்கள், அனுபவங்களை மதிப்பவர்கள்
ஜெனரேஷன் Z 1997–2010 முதல் தலைமுறை டிஜிட்டல் யுகத்தினர், சமூக பிரக்ஞை கொண்டவர்கள்
ஜெனரேஷன் Alpha 2011–2024 உயர் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட உலகில் வாழ்பவர்கள்
ஜெனரேஷன் Beta 2025–2039 ஏஐ தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட உலகில் வாழ்பவர்கள், குளோபல் சிட்டிசன்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.