சென்னை: “தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்வி வைரஸ் (HMPV) தொற்று சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இருவருமே நலமுடன் இருக்கிறார்கள். எனவே இந்த வைரஸ் தானாகவே சரியாக கூடியது, யாரும் பயப்படத் தேவையில்லை. எனவே இந்த வைரஸ் தொடர்பாக பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை,” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், ஹெச்எம்பி வைரஸ் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் இன்று (ஜன.7) நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “ஹெச்எம்பிவி என்று சொல்லக்கூடிய வைரஸ் பற்றிய செய்தி தொடங்கியவுடனேயே நாமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறோம். இந்த வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் இதுவரை எந்தவிதமான அறிவுறுத்தல்களும் செய்யப்படவில்லை. அதேபோல் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக இதுபோல் பாதிப்புகள் ஏற்படும்போது குறிப்பாக மாநிலங்களில் உள்ள சுகாதாரத் துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்புவார்கள். அதுவும் கூட இதுவரை இல்லை.
மத்திய அரசு மருத்துவத் துறை செயலாளர் மூலம் காணொளிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நமது துறையின் செயலாளர் மற்றும் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர். மத்திய சுகாதாரத் துறை செயலாளர் காணொளிக் கூட்டத்தில் பல்வேறு தகவல்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதாவது இந்த வைரஸ் குறித்து பயப்படத் தேவையில்லை. பதற்றப்படவும் தேவையில்லை. இது 50 ஆண்டுகளுக்கு முன்னால் பரவிய வைரஸ்.
2001-ல் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புகள் வந்தால் 3 முதல் 6 நாட்களுக்கு சளி, இருமல் போன்ற சிறிய வகை பாதிப்புகள் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் பருவமழை தொடங்குகிறபோது வருகின்ற காய்ச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போதும் கூட முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகள் உலகம் முழுவதும் தற்போதும் இருந்து வருகிறது.
கோவிட் காலங்களில் உள்ள வைரஸ் அதனைத் தொடர்ந்து ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், கம்மா, கப்பா, ஒமைக்ரான் போன்ற பல்வேறு வகைகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வந்தது. அதில் வீரியம் மிக்க வைரஸ், வீரியம் குறைந்த வைரஸ் என்று பலவகைகள் இருந்தது. அன்று அரசு எடுத்த நடவடிக்கை RTPCR பரிசோதனை தனியார் மையங்களில் அதிகப்படுத்தியது. பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஏற்ற சிகிச்சைகள் வழங்கி பாதிப்புகளை அரசு கட்டுப்படுத்தியது.
ஆனால், இந்த வைரஸ் பொறுத்தவரை அந்த மாதிரியான எந்தவித பாதிப்புகளும் இல்லை. 3 முதல் 5 நாட்களில் தானாகவே குணமாகி விடும். இதற்கென பிரத்யேகமாக எந்தவித சிகிச்சைகளும் இல்லை. எந்தவித சிகிச்சைகளும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே தானாகவே சரியாகிவிடும் என்கின்ற நிலையில் இருந்து வருகிறது. எனவே இந்த வைரஸ் தொடர்பாக பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்பிவி (HMPV) தொற்று சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற இணை நோய்கள் உள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டவர் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் என 2 பேருமே நலமுடன் இருக்கிறார்கள். எனவே இந்த வைரஸ் தானாகவே சரியாக கூடியது, யாரும் பயப்படத் தேவையில்லை.
எனவே, பெரிய அளவில் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் இந்த நோய் பாதிப்புகள் என்பது காய்ச்சல், இருமல், சளி போன்ற உபாதைகள் உள்ளவர்கள் யார் போய் மருத்துமனைகளுக்கு அல்லது ஆய்வகங்களுக்கு போய் பரிசோதனை செய்துகொண்டால் ஒரு பத்து, இருபது பேரில் யாருக்காவது இது போன்ற இந்த வைரஸின் தாக்கம் இருக்கக் கூடும். இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை, இது பதற்றப்பட கூடிய அளவுக்கு வீரியமிக்க வைரஸ் அல்ல. ஒரு வீரியம் குறைந்த அளவிலான வைரஸ் தான். நாம் இது குறித்து கவலைப்படவோ அச்சப்படவோ தேவையில்லை.
ஜப்பான் போன்ற நாடுகளில் சாதாரணமாகவே முகக்கவசம் இல்லாமல் யாரும் நடப்பதே இல்லை. இந்த மாதிரியான நோய் பாதிப்புகள் இருக்கின்ற நாடுகளில் முகக்கவசங்கள் அணிவது அந்நாடுகளில் ஊக்குவிக்கப்படுகிறது. அந்த வகையில் நாமும்கூட இந்த பாதிப்பு இருப்பவர்கள், குறிப்பாக பருவமழையை ஒட்டி வருகிற இந்த நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் பொது வெளியில் செல்கிறபோது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது.
அதேபோல் இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவது, சானிடைசர் பயன்படுத்துவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, அதிக அளவிலான சளி, காய்ச்சல், இருமல் இந்த மாதிரியான பாதிப்புகள் சளி தும்மும்போதோ இருமும்போதோ அதனுடைய நீர்த்திவலைகள் மற்றவர்கள் மேல் படும். அது எந்த நோயாக இருந்தாலும் மற்றவர்களை தொற்றும். எனவே தொற்று நோய்கள், தொற்றா நோய்களின் பாதிப்பு என்பது தொடர்ச்சியாக மனித இனம் உருவான நாளில் இருந்தே இருக்கிறது.
அந்த வகையில் நாம் இதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முகக்கவசத்தை இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் பொதுவெளிக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்வது, அந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் மட்டுமல்ல எல்லோருமே கை கழுவுவது என்பது தினந்தோரும், ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை கை கழுவினாலும் எதுவுமே பாதிக்காது.
அதனால் எந்த விதமான செலவும் இருக்காது. எந்த விரயமும் உடல் உறுப்புகளில் ஏற்படாது. எனவே அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக்கொள்வது இந்த மாதிரி நடவடிக்கைகளில் நாம் முழுமையாக இருந்தாலே போதும் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. அரசை பொருத்தவரை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. எனவே, இதுகுறித்து பெரிய அளவில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் கூறினார்.