India National Cricket Team, IND vs ENG: 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி இந்த ஜனவரி, பிப்ரவரியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. வரும் ஜன. 22ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் பிப்.12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்.19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் பயிற்சியாக அமையும்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர்தான் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடைசி ஐசிசி தொடராக அமைய வாய்ப்புள்ளது. அப்படியிருக்க, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஸ்குவாட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஸ்குவாட் மீதான எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகமாகி உள்ளது. அந்த வகையில், இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் ஸ்குவாட் இன்றோ, நாளையோ அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
IND vs ENG: பும்ரா வர மாட்டார்
முதலில் டி20 அணியே அறிவிக்கப்படும். இருப்பினும் ஒருநாள் அணிதான் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காயத்தில் சிக்கியிருக்கும் பும்ரா இங்கிலாந்து தொடரில் விளையாட மாட்டார் என்பது 90% உறுதியாகி இருக்கிறது எனலாம். வேண்டுமென்றால் கடைசி ஒருநாள் போட்டியில் மட்டும் ஒரு பயிற்சிக்காக பும்ரா விளையாடலாம் என கூறப்படுகிறது.