ISRO: முதன்முறையாக விண்வெளியில் துளிர்த்த உயிர்; காராமணி விதைகளை முளைக்கச் செய்து சாதனை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) பூமிக்கு வெளியே காராமணி விதைகளை முளைக்க வைத்து சாதனை படைத்துள்ளது.

விண்வெளி சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான சிறிய ஆய்வு தொகுதியின் (CROPS) ஒரு பகுதியாக பி.எஸ்.எல்.வி-சி60 ராக்கெட்டில் இவை அனுப்பப்பட்டன. விண்வெளிக்குச் சென்ற 4 நாட்களிலேயே விதைகள் முளைத்துள்ளன.

டிசம்பர் 30ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி60 ராக்கெட் இரண்டு ஸ்பேடக்ஸ் செயற்கைகோள்களை சுற்றுவட்டப்பாதைதில் நிலை நிறுத்தியது.

அத்துடன் 24 உள் சோதனைகளுடன் POEM-4 இயங்குதளத்தை கொண்டு சென்றது. இந்த 24 சோதனைகளுள் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) வடிவமைத்த CROPS சோதனையும் அடங்கும். விண்வெளியின் தனித்துவமான மைக்ரோ கிராவிட்டி சூழலில் தாவர வளர்ச்சியை ஆராய இந்த சோதனை பயன்படுகிறது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “விண்வெளியில் உயிருள்ள பயிர்கள்! VSSC-ன் CROPS சோதனை PSLV-C60 POEM-4 தளத்தில் 4 நாட்களில் வெற்றிகரமாக காராமணி விதைகளை முளைக்கச் செய்து சாதனை. விரைவில் இலைகள் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

CROPS சோதனை

மிக நீண்டகாலமாக விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்த சோதனகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் விதைகள் விண்வெளியில் முளைக்கவைக்கப்படுவது இதுவே முதன்முறை. செவ்வாய்யில் தாவரங்களை வளர்க்கவும் அதைத்தாண்டியும் பல திட்டங்கள் விஞ்ஞானிகள் வசம் இருக்கின்றன. முதற்கட்டமாக இவற்றை விண்வெளி வீரர்களுக்கான உணவாக பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனைக்காக உருவாக்கப்பட்ட மூடிய சுற்றுச்சூழல் அமைப்பினுள் 8 காராமணி விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. விண்வெளி பயணத்தில் தாவரங்கள் எதிர்கொள்ளும் வெப்பநிலை மாற்றங்களை எதிர்கொள்ள இந்த அமைப்பினுள் வெப்பநிலை ஒழுங்கு செய்யும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

தாவரம் வளர்வதற்கு தேவையான ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு அளவுகள், வெப்பநிலை, வளிமண்டல ஈரப்பதம், மற்றும் மண் ஈரப்பதம் ஆகியவற்றை இந்த அமைப்பு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

வேற்றுகிரகங்களில் தாவரங்களை விளைவிக்க இஸ்ரோ எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு சிறிய புள்ளிதான் CROPS சோதனை. வருங்காலங்களில் நீண்ட கால நோக்கில் தாவரங்களை வளர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இப்போதைய சோதனை விண்வெளியில் இரண்டு இலைகள் வரும் வரை தாவரத்தை வளர்ப்பதற்கான 5-7 நாட்கள் எடுத்துக்கொள்ளும் சோதனைதான்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.