கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2015-ம் ஆண்டு தன் லிபரல் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்தார். அப்போது அவருக்கு வயது 43. அரசியலில் புதிய முகம், இளம் தலைவர், வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட புதிய அரசியல் உத்தி, செல்வந்தர்கள் மீதான வரியை அதிகரித்தது, காலநிலை மாற்றத்துக்கேற்றவாறு திட்டங்கள் என மக்கள் விரும்பும் தலைவராக வளர்ந்துவந்தார். அதே நேரம், ஊழல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அதைத் தொடர்ந்து, சமீபமாக கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பணவீக்கம் என, அவரது ஆட்சி மீதான விரக்தி காரணமாக, அவரின் செல்வாக்கு மக்களிடம் குறைந்து வந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/01/AP19293225586808.jpg)
அதன் எதிரொலியாக ஜஸ்டின் ட்ரூடோ அங்கம் வகிக்கும் லிபரல் கட்சியிலிருந்தே அவருக்கான எதிர்ப்புகள் எழத் தொடங்கியது. பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், தன் சொந்தக் கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டார். பெருகிவரும் உள்நாட்டு பொருளாதார சிக்கல்களிலிருந்து, மக்களை திசைதிருப்ப இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டார். இதனால் அவரின் செல்வாக்கு கட்சிக்குள்ளேயும் சரியத் தொடங்கியது. கடந்த ஆண்டு சீன் கேசி (Sean Casey), கென் மெக்டொனால்ட் (Ken McDonald) உள்பட பல உயர்மட்ட லிபரல் கட்சி எம்.பி.க்கள், ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமையின் மீதான அதிருப்தியை காரணம் காட்டி, அவரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தினர்.
20-க்கும் மேற்பட்ட லிபரல் கட்சி எம்.பி.க்கள் அவர் பதவி விலக வேண்டும் என்ற உறுதிமொழியில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, கனடாவின் துணை பிரதமரும், நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland) கடந்த டிசம்பர் மாதம் தன் இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்தது, அரசியல் குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாகவே சமீபத்தில் நடந்த இரண்டு இடைத்தேர்தல்களில் லிபரல் கட்சி தோல்வியைச் சந்தித்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/01/aaaas.jpg)
இப்படி உள்கட்சிக்குள்ளேயே பல சிக்கல்களையும் எதிர்ப்புகளையும், ஆதரவின்மையையும் சந்தித்துவந்த ஜஸ்டின் ட்ரூடோ தன் பதவி விலகும் முடிவை அறிவிக்கும்போது, “2015-ம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். ஆனால், இப்போது உள்கட்சி பிரச்னைகளை கவனிக்க வேண்டியிருந்ததால், கனடா மக்கள் தேர்ந்தெடுத்த சிறந்த பிரதமராக என்னால் இருக்க முடியவில்லை. இதன் காரணமாக என் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருக்கிறேன். அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்போதைய பதவியில் நீடிப்பேன்” என்றிருக்கிறார்.
காலிஸ்தானி ஆதாரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் உள்ள சீக்கிய கோவிலுக்கு வெளியே கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பிருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ செப்டம்பர் 2023-ல் குற்றம்சாட்டினார். அப்போது தொடங்கியது இந்தியா – கனடா உறவில் விரிசல். இதை பலமாக மறுத்து வந்த இந்தியா, `காலிஸ்தானி அனுதாபிகளிடம் அரசியல் ஆதாயத்திற்காக அலைகிறது கனடா” எனக் காட்டமாக விமர்சித்திருந்தது. மேலும், கனட தூதரை திருப்பி அனுப்பியது முதல் கனடர்களுக்கான விசாவை நிறுத்தி வைத்தது உள்ளிட்ட சில எதிர்வினைகளையும் வெளிப்படுத்தியது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/01/India-Canada-Tensions.png)
ஜஸ்டின் ட்ரூட்டோவும் சில எதிர்வினைகளை செயல்படுத்தினார். அதே நேரம் ‘குற்றச் செயல்களுக்கு இந்தியா நிதியுதவி செய்கிறது’ என்ற ஜஸ்டின் ட்ரூடோவின் கூற்று அமெரிக்கா உள்ளிட்ட இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு மத்தியில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. கனடாவில் காலிஸ்தான் சார்பு நடவடிக்கைகள், கனடாவின் டொராண்டோவிற்கு அருகில் உள்ள இந்துக் கோவில் மீதான தாக்குதல் உள்ளிட்ட செயல்பாடுகள் இரு நாடுகளுக்கு இடையேயான விரிசலை மேலும் அதிகப்படுத்தியது.
G20 உச்சி மாநாடு போன்ற சர்வதேச கூட்டங்களில் இரு நாட்டின் பிரதமர்கள் சந்தித்துக் கொண்டபோதும் கூட, இந்தப் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவே இல்லை. இந்த விவகாரத்தை லிபரல் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள், லிபரல் கட்சிக்கும், ஜஸ்டின் ட்ருடோவுக்கும் ஏற்பட்ட பெரும் பின்னடைவாகக் கருதினர். அதன் காரணமாகதான் ‘பொருளாதார சிக்கலை சீர்படுத்த முடியாமல், காலிஸ்தானி விவகாரம் மூலம் மக்களை திசை திருப்புகிறார்” என்றக் குற்றச்சாட்டு கட்சிக்குள்ளிருந்தே அழுத்தமாக எழுந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.