புதுடெல்லி: அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 பேரில் ஒருவரின் உடல், இன்று (புதன்கிழமை) மீட்கப்பட்டுள்ளது. 3-வது நாளாக நடைபெறும் மீட்பு பணியின்போது ராணுவ நீர்மூழ்கி வீரர்கள் உடலை மீட்டனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் மேலும் கூறுகையில், “இன்று அதிகாலையில் சுரங்கத்துக்குள் ஒரு உடலை நீர்மூழ்கி வீரர்கள் கண்டுபிடித்தனர். இறந்தவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சுரங்கத்துக்குள் சிக்கிய மீதமுள்ள 8 பேரை மீட்கும் பணியில், கடற்படை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் 8 பேரும் உயிர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.” என்று தெரிவித்தனர்.
அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள 300 அடி ஆழம் கொண்ட நிலக்கரி சுரங்கத்தில் திங்கள்கிழமை எதிர்பாராத விதமாக வெள்ளம் சூழ்ந்ததில் சுரங்கத்தினுள் இருந்தவர்கள் நீரினுள் சிக்கினர். அதில் 3 பேர் உயிரிழந்திருந்தனர். குறைந்தது 6 பேர் உள்ளே சிக்கி இருக்கலாம் என அச்சம் நிலவியது. இந்நிலையில் ஒருவர் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மீட்பு பணிகள் குறித்து மாநில முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கெனவே ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவின் நீர்மூழ்கி வீரர்கள் சுரங்கத்தில் இறங்கியுள்ளனர். கடற்படை வீரர்களும் களத்தில் உள்ளனர். அவர்களும் உள்ள இறங்கத் தயாராகி வருகின்றனர்.
இதனிடையே, மாநில பேரிடர் மீட்பு படையின் நீரிரைக்கும் இயந்திரங்கள் உம்பராங்சுவில் இருந்து சம்பவ இடத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது. கூடுதலாக, ONGC -யின் நீரிரைக்கும் இயந்திரமும் எம்ஐ-17 ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு தயாராக இருக்கிறது. விரைவில் அனுப்பி வைக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “இந்தச் சுரங்கம் சட்டவிரோதமானது போல் தெரிகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.” என்று முதல்வர் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.