சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்துக்கு நீதி கேட்டு, அண்ணா பல்கலை. முன்பாக அதிமுக மாணவரணி சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதேபோல், தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் மதுரவாயலில் அக்கட்சியினர் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், போராட்டம் நடத்திய அதிமுகவினர் 161 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸாரும், தேமுதிகவினர் 115 பேர் மீது மதுரவாயல் போலீஸாரும் சட்ட விரோதமாகக் கூடுதல், அரசு ஊழியரின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் இருத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.