புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான இரண்டு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் முதல் கூட்டம் இன்று (புதன்கிழமை) கூடியது.
பாஜக எம்பி-யும் முன்னாள் சட்ட அமைச்சருமான பிபி சவுத்ரி தலைமையிலான 39 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் காங்கிரஸைச் சேர்ந்த பிரியங்கா காந்தி வத்ரா, ஜேடி(யு) சார்பில் சஞ்சய் ஜா, சிவசேனா சார்பில் ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில், குழு உறுப்பினர்களுக்கு முன்மொழியப்பட்ட சட்டங்களின் விதிகள் குறித்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அதிகாரிகள் விளக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலமைப்பு (129 வது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகியவை சமீபத்திய குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் தேர்தல்கள் தொடர்பான இரண்டு சட்ட வரைவுகளை ஆய்வு செய்வதற்கான இந்த குழுவின் ஒரு பகுதியாக இருக்க பல அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்ததால், குழுவின் பலம் 31 இல் இருந்து 39 ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்தது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பர்ஷோத்தம் ரூபாலா, மணீஷ் திவாரி, அனில் பலுனி, பன்சூரி ஸ்வராஜ், சம்பித் பத்ரா உட்பட பலர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுவில் மக்களவையில் இருந்து 27 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இருந்து 12 உறுப்பினர்களும் உள்ளனர்.