இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தலைமை ஏற்றதில் இருந்து இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது, அவரது தலைமையில் முதன் முதலில் விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இழந்தது இந்தியா. அதன் பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணத்தில் தோற்றது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
இந்த வெயிட் வாஷ் செய்யப்பட்ட அடுத்த இரண்டு மாதங்களுக்குள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரை 1-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள தவறியது இந்தியா. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில், மீதலுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
பேட்டர்கள் சொதப்பல்
ஆஸ்திரேலியாவின் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ரன்கள் அடிக்க சிரமப்பட்டனர். குறிப்பாக ரோஹித் சர்மா மொத்தமாக வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்தார். முதல் டெஸ்டில் சதம் அடித்து இருந்தாலும் அதனை தொடர்ந்து விராட் கோலி ரன்கள் அடிக்க தவறினார். மொத்தமாக 23 சராசரியில் 190 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் இவர்கள் இரண்டு பேர் மீதும் அழுத்தம் இருந்தது. இதனை புரிந்து கொண்டு ரோகித் சர்மா கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். விராட் கோலி தொடர்ந்து ஒரே மாதிரி அவுட் ஆகி வெளியேறினார்.
மூன்று பேரும் நீக்கப்படுவார்களா?
இந்நிலையில் கம்பீர், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மூன்று பேரையும் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் பல இடங்களில் இருந்து தர தொடங்கியுள்ளது. இருப்பினும் அவர்கள் மூன்று பேரும் அவர்களின் இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. அதன் பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவில் தேர்வு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கௌதம் கம்பீர் மீது எந்தவித பெரிய நடவடிக்கைகளையும் பிசிசிஐ எடுக்காது என்று கூறப்படுகிறது.
ஒருவேளை கௌதம் கம்பீர் நீக்கப்படும் பட்சத்தில் விவிஎஸ் லட்சுமணன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படலாம். தலைமை பயிற்சியாளர்கள் இல்லாத சமயத்தில் விவிஎஸ் லட்சுமணன் தலைமையில் இந்திய அணி சில தொடர்களில் விளையாடி உள்ளது அவற்றில் வெற்றிகளையும் பெற்றுள்ளது. ராகுல் டிராவிட்டிற்கு பிறகு லட்சுமணன் தான் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கம்பீர் தலைமை பொறுப்பை ஏற்றார்.