புதுடெல்லி: பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக் கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடக்கிறது.
தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) ஆகிய 3 கட்சிகள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மூன்று கட்சிகளின் தலைவர்கள் அகிலேஷ், மம்தா, உத்தவ் ஆகிய 3 பேருமே, பாஜக தோல்வி அடைய வேண்டும் என்று ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் உ.பி.யில் காங்கிரஸுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைத்தது. இதனால் சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின் ஹரியானா தேர்தலில் சமாஜ்வாதியை புறக்கணித்தது காங்கிரஸ். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தோற்க இந்த புறக்கணிப்பும் காரணமானது. மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்ட உத்தவ்தாக்கரேவின் சிவசேனா கட்சியும் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்துள்ளது.
டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஆட்சி செய்தது. ஆனால், கடந்த 2 சட்டப்பேரவை தேர்தல்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. எனினும், டெல்லி தேர்தலில் முன்னாள் முதல்வர் ஷீலாவின் மகன் சஞ்சய் தீட்சித், முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மாக்கன், அகில இந்திய மகளிர் அணி தலைவர் அல்கா லம்பா, டெல்லியின் முன்னாள் அமைச்சர் ஹாரூன் யூசுப் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களுக்கு கட்சி மேலிடம் ‘சீட்’ தந்துள்ளது.