தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் தொடக்கம்: கருப்புச் சட்டையில் வந்த அதிமுகவினர்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அலுவல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவைக்கு வந்த அதிமுகவினர் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், டங்க்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு வாசகம் கொண்ட வெள்ளை மாஸ்க்கும் அணிந்து வந்தனர். உடல்நிலை பாதிப்பு காரணமாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்றும் அவைக்கு வரவில்லை எனத் தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதல் நாளில் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமல் ஆளுநர் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். பின்னர், ஆளுநர் உரையில் உள்ளது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்த சிறப்புத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இரண்டாம் நாளான நேற்று (ஜனவரி 7) மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். பின்னர் மறைந்த உறுப்பினர்களுக்கு அவை உறுப்பினர்கள அனைவரும் மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, மூன்றாம் நாளான இன்று (ஜன.8) முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி வரை விவாதம் நடைபெறும். இறுதி நாளான 11-ம் தேதி, விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உள்ளார்.

இந்நிலையில் இன்று 3-ம் நாள் அலுவல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் விவாதம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பில் பேரவைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, விசிக உள்ளிட்ட கட்சிகள் இது தொடர்பாக நோடடீஸ் வழங்கியுள்ளது குறி்ப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய அலுவல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், அதிமுகவினர் அண்ணா பல்கலை., சம்பவத்தைக் கண்டித்து ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், ‘டங்க்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்’ என்ற சுரங்க எதிர்ப்பு வாசகம் கொண்ட வெள்ளை மாஸ்க்கும் அணிந்து வந்தனர். உடல்நிலை பாதிப்பு காரணமாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்றும் அவைக்கு வரவில்லை எனத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.