புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாச்சாரத் தொடர்பை வலுப்படுத்த ‘காசி தமிழ்ச் சங்கமம்’ (கேடிஎஸ்-3) 2022-ல் தொடங்கப்பட்டது.
வாராணசியில் ஒரு மாதம் நடைபெற்ற இந்த சங்கமம், பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உருவானது. தனது மக்களவை தொகுதியில் நடைபெற்றதால் இதை பிரதமர் மோடியே தொடக்கி வைத்திருந்தார். அந்த வகையில், தெலுங்கு, சவுராஷ்டிரா சங்கமங்களும் நடைபெற்றன. இதையடுத்து, 2-வது தமிழ்ச் சங்கமம் வாராணசியில் நவம்பர் 2023-ல் 10 நாட்களுக்கு நடைபெற்றது. அதேநேரம் 2024-ல் நடைபெறவிருந்த மூன்றாவது சங்கமம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 15 முதல் 24 வரை 10 நாட்களுக்கு காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. வழக்கம் போல், இந்த சங்கமத்தை மத்தியக் கல்வித் துறையுடன் இணைந்து வாராணசி மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ யிடம் மத்திய கல்வித் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும் போது, “கடந்த இரண்டு சங்கமங்களும் கடும் குளிர் நிலவும் நாட்களான நவம்பரில் நடைபெற்றன. இதை சமாளிக்க தமிழர்கள் பட்ட சிரமம் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை சமாளிப்பதுடன், பிரயாக்ராஜ் நகரில் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவையும் காணும் வகையில் பிப்ரவரியில் கேடிஎஸ் 3 நடத்தப்பட உள்ளது. இனி ஆண்டுதோறும் கேடிஎஸ், குளிர் குறைந்த இதே மாதத்தில் நடைபெறும்” என்றன.
வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் கேடிஎஸ்-1 நடைபெற்றது. கேடிஎஸ்-2, வாராணசி மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் அளித்த யோசனையை ஏற்று நமோ காட்டில் (நமோ படித்துறை) நடைபெற்றது. கங்கையில் புதிதாக அமைந்த நமோ காட்டில், கேடிஎஸ்-2 நடைபெற்றதை தொடர்ந்து அது ஒரு சுற்றுலா தலமாக வளர்ச்சி பெற்றுள்ளது. தினமும் சுமார் ஐந்தாயிரம் பேர் வருகை தருகின்றனர்.
எனவே, கேடிஎஸ்-3 நமோ காட்டிலேயே நடைபெற உள்ளது. வழக்கம்போல், இந்த சங்கமத்துக்கும் தமிழகத்தின் சென்னை, மதுரை மற்றும் ராமேஸ்வரம் நகரங்களிலிருந்து தமிழர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர். இந்த வருடம் புதிதாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் 57 மத்தியப் பல்கலைக்கழகங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கு கொள்கின்றனர்.