முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் மற்றும் தொகுதி உடன்பாடு மட்டும்தான். ஒருபோதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்கமாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உறுதிபட தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியலமைப்புச் சட்டம், போராடும் உரிமையை வழங்கியுள்ளது. யார் போராட அனுமதி கோரினாலும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். போராட்டத்தை அவர்கள் ஒழுங்குபடுத்தலாம். போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதமாகும். தமிழக காவல்துறை இத்தகைய போக்கைத்தான் கொண்டுள்ளது. காவல்துறையின் இந்த அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
மக்கள் நலனுக்கு எதிரான முடிவை அரசு எடுத்தால் நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம். சாம்சங் தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. இது, தொழிலாளர் விரோதப் போக்குதான். திமுக முதலாளித்துவ கட்சி. எங்கள் கட்சி தொழிலாளர்கள் நலன் சார்ந்தது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் மற்றும் தொகுதி உடன்பாடு மட்டும்தான். ஒருபோதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்கமாட்டோம்.
மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்க்கும் திமுகவுடன் இணைந்து போராட வேண்டிய சூழல் உள்ளது. வரும் பிப்.5-ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக யார் போட்டியிட்டாலும் எங்கள் கட்சி ஆதரிக்கும். அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறையில் பணிகள் நடப்பதை எதிர்க்கிறோம்.
தமிழக சட்டப்பேரவை மரபு குறித்து அரசும், சபாநாயகரும் விளக்கம் அளித்த பிறகும் பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்திருக்கிறார். போட்டி அரசு நடத்தும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். திமுக அரசு 3 ஆண்டுகளில் அவர்கள் அறிவித்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளனர். ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு குவிண்டாலுக்கு ரூ.4,000 என்பன உள்ளிட்டவற்றையும் நிறைவேற்ற வேண்டும். இதுபோன்ற வாக்குறுதிகள் 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றாமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், திமுக அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டும்.
1949-ம் ஆண்டு முதல் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஏராளமான தரிசு நிலங்கள் உள்ளன. அவற்றில் இருந்து வீடற்றவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். இதுதொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். நீதிமன்ற உத்தரவு, அரசாணைகள் இருந்தும் பட்டியலினத்தவர்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் மீட்கப்படவில்லை. இவற்றை மீட்க அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திமுக எம்.பி. ஆ.ராசா, தனிப்பட்ட முறையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்புடையதல்ல. அவை தவறானவை, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகும். இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.
பேட்டியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.