`400% வட்டி, ரத்தினகல்; ஒரு லட்சம் பேரிடம் ரூ.1000 கோடி மோசடி’ – உக்ரைன் ஓடிய நகைக்கடை உரிமையாளர்

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் தங்களது பணத்தை இழப்பது, இப்போதும் வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தாலும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. இதனால் தினம் தினம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்து கொண்டுதான் இருக்கின்றனர், மும்பையில் ஒரே நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.

மும்பை முழுவதும் டோரஸ் என்ற நகைக்கடையின் கிளைகள் செயல்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் இதன் முதல் கிளை தாதர் பகுதியில் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கு புறநகரில் உள்ள போரிவலி, மீராரோடு, கல்யான், நவிமும்பையில் கிளைகள் திறக்கப்பட்டது. இந்நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றது. இதற்காக கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்தது.

கைதான வேலண்டினா

அதன் படி முதலீட்டார்கள் கொடுக்கும் பணத்திற்கு வாரத்திற்கு 4, 5, 7 சதவீதம் என வட்டியை அதிகரித்துக்கொண்டே இருந்தனர். அதோடு முதலீட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் நவரத்தின கல் ஒன்றையும் பரிசாக கொடுத்தனர். இதன் படி ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அவர்களது வங்கிக்கணக்கிற்கு வாரம் 5 ஆயிரம் வரவு வைக்கப்படும். கிப்ட்கள், அளவுக்கு அதிகமான வட்டி போன்ற காரணங்களால் மக்கள் பெருமளவில் இக்கடையில் தங்களது பணத்தை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். பொதுமக்களின் பணத்திற்கு ஆரம்பத்தில் சில மாதங்கள் சரியாக ஒவ்வொரு மாதமும் வட்டியை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தி வந்தனர். கடைசியாக வாரம் 11 சதவீத வட்டியை வாரி வழங்கினர். இதனால் முதலீடு மளமளவென வந்தது.

கடை முன்பு கூடிய முதலீட்டாளர்கள்

திடீரென வட்டி கொடுப்பதை நிறுத்திய நகைக்கடை நிர்வாகம் கடையை மூடியது. உடனே பாதிக்கப்பட்ட மக்கள் அனைத்து டோரஸ் கிளை நகைக்கடைகள் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நவிமும்பை துர்பேயில் உள்ள நகைக்கடை முன்பு கூடிய பொதுமக்கள் கடை மீது கல்வீசித்தாக்கினர். போலீஸார் உடனே விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இது குறித்து துர்பே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”டோரஸ் நகைக்கடையில் அளவுக்கு அதிகமாக வட்டி கொடுப்பதாக கூறி பணம் வசூலிப்பது குறித்து எங்களுக்கு மூன்று மாதத்திற்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே நாங்கள் இது குறித்து ரகசியமாக விசாரித்து வந்தோம். ஆனால் அதற்குள் குற்றவாளி தலைமறைவாகிவிட்டார்”என்றார்.

மீராரோடு நகைக்கடை முன்பு கூடியிருந்த மக்கள் இது குறித்து கூறுகையில்,”ஒவ்வொருவரும் 50 ஆயிரத்தில் இருந்து 60 லட்சம் வரை முதலீடு செய்திருக்கிறோம்”என்றனர். ரூ.1.50 லட்சம் கட்டி ஏமாந்து போன சுபம் திவாரி இது குறித்து கூறுகையில், `நான் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தேன். வாரத்திற்கு 5 முதல் 12 சதவீதம் வரை வட்டி கொடுப்பதாக சொன்னார்கள். எனக்கு வட்டியாக 54 ஆயிரம் கிடைத்திருக்கிறது. ஒரு லட்சத்தை இழந்துவிட்டேன் என்று தெரிவித்தார். தாதர் கிளையில் கார்ரோடு பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி பிரதீப் குமார் என்பவர் ரூ.13.5 கோடியை முதலீடு செய்திருந்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடையின் இயக்குனர்கள் சர்வேஷ், மேலாளர் தானியா, வேலண்டினா குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டோரஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி

கடை உரிமையாளர்களாக கருதப்படும் ஜான் கார்டர், விக்டோரியா ஆகியோர் உக்ரைன் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டனர். சர்வேஷ் சுர்வேயிக்கு நகைக்கடை வியாபாரம் குறித்து எதுவும் தெரியாது. ஆனால் உள்ளூர் பிரமுகர் ஒருவர் இருக்கவேண்டும் என்பதற்காக சர்வேஷ் சுர்வேயை இயக்குனர்களாக நியமித்துள்ளனர். அனைத்து ஆவணங்களிலும் சர்வேஷ்தான் கையெழுத்துள்ளார். ஆனால் ஜான் கார்டரும், விக்டோரியாவும் வெளியில் வராமல் கடையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இருவரும் உக்ரைன் நாட்டைசேர்ந்தவர்கள் ஆவர். வேலண்டினா குமார் ரஷ்யாவை சேர்ந்தவர். அவர் இந்தியாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

52 வாரம் தொடர்ந்து வட்டி கொடுக்கப்படும் என்று கூறிவிட்டு கடந்த டிசம்பர் மாதம் தொழில் நுட்ப காரணங்களை கூறி திடீரென வட்டி கொடுப்பதை நிறுத்தினர். அதோடு ஜனவரி முதல் வாரத்தில் திடீரென கடையை மூடிவிட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் 1.25 லட்சம் பேரிடம் நகைக்கடை நிர்வாகம் பணம் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆயிரம் கோடிக்கும் மேல் இழந்திருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் கடையின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த தபிக் ரியாஸ்தான் இது போன்ற திட்டங்களை அறிவித்து மோசடி செய்துவிட்டதாக டோரஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.