காசா: காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 46,006 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 46,006 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,09,378 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அது கூறியுள்ளது. அதேநேரத்தில், இறந்தவர்களில் எத்தனை பேர் போராளிகள் அல்லது பொதுமக்கள் என்பதை அது கூறவில்லை.
மற்றொருபுறம், 17,000-க்கும் மேற்பட்ட போராளிகளை தங்கள் ராணுவம் கொன்றுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. எனினும், இதற்கு ஆதாரத்தை அது வழங்கவில்லை. பொது மக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க முயற்சிப்பதாகவும், போராளிகள் குடியிருப்புப் பகுதிகளில் பதுங்கிக்கொண்டு செயல்படுவதாலேயே பொதுமக்களும் இறக்க நேரிடுவதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் போராளிகள் மறைந்திருப்பதாகக் கூறி இஸ்ரேல் பல தாக்குதல்களை நடத்தி உள்ளது.
ஹமாஸ் தலைமையிலான போராளிகள் கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து சுமார் 1,200 அப்பாவி பொதுமக்களை கொன்றனர். மேலும், சுமார் 250 பேரைக் கடத்திச் சென்றனர். இதையடுத்து, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கியது. சுமார் 100 பிணைக் கைதிகள் இன்னமும் காசாவுக்குள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதியினர் ஆரம்ப தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இறந்திருக்கலாம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்தப் போர் காசாவின் பெரும் பகுதியை தரைமட்டமாக்கியுள்ளது. அங்கு வசித்த 23 லட்சம் மக்களில் 90% பேரை இடம்பெயர வைத்துள்ளது. பலர் பலமுறை தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கான குறைந்த அணுகலுடன், லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையோரத்தில் பரந்து விரிந்த கூடார முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகளை விடுவித்தல் விவகாரத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு நெருங்கி வருவதாகத் தெரிகிறது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகியவற்றின் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு மீண்டும் மீண்டும் முடங்கியதால், பெரிய தடைகள் இன்னும் இருப்பதாகக் கூறப்படுகிறது.