கோவா,
13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. அதன்படி, கோவாவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் எப்.சி. கோவா – ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோவா அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டன. 90வது நிமிடம் வரை ஆட்டத்தில் 1-0 என கோவா முன்னிலை பெற்றது.
இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் கால அவகாசத்தில் ஐதராபாத் அணி (90+1வது நிமிடம்) கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.